கலவர பூமியான கேளிக்கை நகரம் : அதிபர் ட்ரம்ப் உடன் மோதும் கலிஃபோர்னியா ஆளுநர்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கலவர பூமியாகக் காட்சி அளித்துக் கொண்டிருப்பதற்கான பின்னணி காரணம் என்ன? கலவரத்தை ஒடுக்கத் தேசியப் பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைத்த அதிபர் ட்ரம்ப் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கலிஃபோர்னியா மாகாண ஆளுநர் அறிவித்தது ஏன்? என்று விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
அமெரிக்காவின் கேளிக்கை நகரமாக அறியப்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ், இன்று கலவர பூமியாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த நகரின் முக்கிய இடங்களில் எரிந்து முடிந்த வாகனங்கள், வெறிச்சோடிய வீதிகள் எனப் பதற்றமான சூழலைப் பார்க்க முடிகிறது. இந்த கிளர்ச்சிக்குக் காரணம் அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்த சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான் என அறியப்படுகிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதலே சட்ட விரோத குடியேற்றம், வர்த்தக வரி எனப் பல அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் முன்னெடுத்தார். இந்த சூழலில் தான், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையைக் கண்டித்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் எல்லை ரோந்து அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், கலிஃபோர்னியா மாகாண அரசு மீது, அதிபர் ட்ரம்ப், பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸ்கம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ் ஆகியோருக்கு போராட்டத்தை ஒடுக்கும் திறன் இல்லை என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டத்தை ஒடுக்க, சுமார் 2,000 தேசிய படை வீரர்களையும் அனுப்பி வைத்தார்.
ஆனால், போராட்டம் தான் முடிவுக்கு வரவில்லை. மாறாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேலும் சில இடங்களில் வன்முறை பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் போராட்டம் குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனமான 9 நியூஸின் செய்தியாளர் லாரன் டோமாசி நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது, காவல் துறையினர் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டதில் லாரன் டோமாசி காயமடைந்தார்.
இது ஒருபுறம் என்றால், முகமூடி அணிந்து கொண்டு கலவரத்தைத் தூண்டுபவர்களைக் கைது செய்யும்படி அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்து போராடவும் அவர் தடை விதித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்து வரும் நிலையில், உரிய அனுமதியின்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குள் தேசிய படை வீரர்களை அனுப்பியதற்காக, அவர் மீது சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸ்கம் அதிரடியாக அறிவித்துள்ளார்
இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், தனது கையில் கொடியை ஏந்தி, கார் ஒன்றின் மீது ஏறி நிற்கும் புகைப்படத்தை எலான் மஸ்க் பதிவிட்டு, "இது சரியில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்கின் எக்ஸ் பதிவிற்குப் பதிலளித்துள்ள ஒருவர், "அது என்னுடைய புகைப்படம் தான்! பகிர்ந்ததற்கு மிக்க நன்றி எலான் மஸ்க்!" என பதிவிட்டுள்ளார்.