காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது : அஸ்வினி வைஷ்ணவ்
தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரும்பவில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாக டெல்லியில் செய்தியாளகளை சந்தித்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தான் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கியதை விட 7.5 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
எழும்பூர் உட்பட 77 ரயில்நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அஸ்வினி வைஷ்ணவ், தனித்துவமிக்க புதிய பாம்பன் பாலத்தை திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் புதிதாக 50 நமோ பாரத் ரயில்களை இயக்க மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,
இந்தியாவில் எந்த ரயில்வே திட்டத்திற்கும் நிதி இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.