காவலாளி உருவில் மிருகம் : மாணவி காலை உடைத்து வன்கொடுமை செய்த கொடூரம்!
சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கிப் பயின்ற மாணவி ஒருவர் காவலாளியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் இறந்ததால் கருணை அடிப்படையில் காவலாளி வேலையைப் பெற்ற மேத்யூ என்பவரே இச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் ஜட்ஜ் காலனியில் இயங்கி வரும் அரசு சேவை இல்லம் தான் இது. இந்த சேவை இல்லத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
சேவை இல்லத்தில் கடந்த ஞாயிறு அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை முகத்தில் துணியைப் போர்த்தித் தூக்கிச் சென்ற மர்மநபர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். அந்த நபரிடம் இருந்து தப்பியோட முயற்சித்த போது கொடூரமாகத் தாக்கியதால் சிறுமியின் காலில் முறிவு ஏற்பட்டுக் கூச்சலிட்டதால் மர்மநபர் தப்பி ஓடியுள்ளார்.
தகவல் அறிந்த சேவை இல்ல ஊழியர்கள் சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையின் போது தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறி அச்சிறுமி அழுதிருக்கிறார். காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு சிறுமி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறுமிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக சிட்லப்பாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமிராக்களின் காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்றது. மேலும் சேவை இல்லத்தின் சுற்றுச்சுவர் மிகப்பெரிய அளவில் இருப்பதால் வெளி ஆட்கள் உள்ளே வந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்த காவல்துறையினர் விடுதியில் பணியாற்றும் ஊழியர்களை விசாரிக்கத் தொடங்கினர்.
அப்போது தான், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவை இல்லத்தின் காவலாளியாக பணிபுரிந்து வரும் 50 வயதுடைய மேத்யூ என்பவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. மேத்யூவின் தாயார் அதே சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து காலமான நிலையில் கருணை அடிப்படையில் மேத்யூவிற்கு பணி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் காவலாளியாக பணிபுரிந்து வரும் மேத்யூ, நான்கு நாட்களுக்கு முன்பாக சேவை இல்லத்தில் இணைந்த சிறுமி, வெளியே எதுவும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான மேத்யூ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை மேத்யூவின் மகன் தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த விடுதியின் கண்காணிப்பாளர் ரேவதியிடம் செய்தியாளர்கள் சரமாரியாக எழுப்பிய கேள்விகள் அவரை திக்குமுக்காடச் செய்தது. ஒரு கட்டத்தில் நேற்று முதல் சாப்பிடாததால் மயங்கி விடுவேன் எனப் பதிலளிக்கும் அளவிற்குச் செய்தியாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
அரசு சேவை இல்லத்தில் தங்கிப் பயிலக்கூடிய மாணவிகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலாளியே பாலியல் தொல்லை அளித்திருப்பது அங்குப் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு மேத்யூ வேறு எதாவது சிறுமிகளிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது.