கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல 3-வது நாளாக மக்கள் கூட்டம் அலைமோதியது.
பக்ரீத் மற்றும் வார விடுமுறையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாகச் சென்னை வாழ் வெளியூர் மக்கள் தங்கள் பயணத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கும் நிலையில், திருச்சி, அரியலூர், பட்டுக்கோட்டை, நாகை, சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளே அதிகளவு இயக்கப்படுவதால் முன்பதிவு செய்யாத பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.
கடந்த இரு தினங்களாக போதிய பேருந்துகள் இல்லையெனக்கூறி கிளாம்பாக்கத்தில் மக்கள் போராட்டத்திலும், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட நிலையில், 3-வது நாளாக மக்கள் பேருந்துகளுக்காக அலைமோதினர்.
இந்நிலையில், பேருந்து கிடைக்காமல் தவிக்கும் பயணிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாகப் பதிலளித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.