குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு : அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!
சென்னை தரமணியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர், பெரியார் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், குடிநீரில் கழிவுநீர் மற்றும் சேறு கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து தரமணி- வேளச்சேரி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு ஆதரவாக அதிமுகவினரும் அங்குக் குவிந்தனர். இதைத் தொடர்ந்து 2 நாட்களில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்த போலீசார் பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.