For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

07:35 PM Jun 05, 2025 IST | Murugesan M
குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா   மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி

சேலத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. சேலம் மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் பள்ளபட்டி பூங்கா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாநகராட்சியின் மையப்பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பள்ளபட்டி ஏரி பூங்கா தான் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பிரதான பொழுதுபோக்கு தளமாகத் திகழ்கிறது. ஏரிக்கரையைச் சுற்றி பத்திற்கும் அதிகமான குடில்கள், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள், பாதுகாப்பிற்காகக் கம்பி வேலிகள் என அத்துனை சிறப்பு அம்சங்களுடனுன் காணப்பட்ட இப்பூங்கா அண்மைக்காலமாக எந்தவித வசதியுமில்லாத அவலநிலையில் காட்சியளிக்கிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இப்பூங்கா,  முதலமைச்சரால் திறந்து வைத்த ஒரே ஆண்டிற்குள் பொலிவிழந்து காணப்படுகிறது.

Advertisement

ஏரிப் பூங்கா பயன்பாட்டிற்கு வந்த ஒரு மாதத்திற்குள் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார குடில் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அத்தகைய செயல்களை செய்தவர்கள் யார் என்ற விசாரணை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் மாலை நான்கு மணியை கடந்து விட்டால் இப்பூங்கா முழுவதும் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு காலி பாட்டில்களைப் பூங்காவிலேயே போட்டு விடுவதோடு, நடைப்பயிற்சிக்கு வருவோரிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் மதுப்பிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. மாலை நேரங்களில் மதுப்பிரியர்களின் தொல்லை ஒருபுறமிருக்க, இரவு நேரங்களில் பாலியல் தொழில் அரங்கேறும் இடமாகவும் இப்பூங்கா மாறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பள்ளபட்டி ஏரி பூங்கா, முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. பூங்காவைப் பராமரிக்கத் தவறிய சேலம் மாநகராட்சி மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்

பெருகிவரும் நகர்மயமாக்கலுக்கு மத்தியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், அவர்களின் ஓய்வு நேரத்தை விருப்பம் போலக் கழிக்கவும் உதவும் பூங்காக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனச் சேலம் மாநகராட்சி பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement