For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கும்பமேளாவால் மாறிய வாழ்க்கை : கதாநாயகியாக உருவெடுக்கும் இணைய சென்சேஷன் 'மோனாலிசா'!

09:05 AM Feb 02, 2025 IST | Murugesan M
கும்பமேளாவால் மாறிய வாழ்க்கை    கதாநாயகியாக உருவெடுக்கும்  இணைய சென்சேஷன்  மோனாலிசா

மகா கும்பமேளா மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான மோனாலிசா போன்ஸ்லே, விரைவில் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்ப மேளா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. கும்பமேளா நிகழ்வில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், புனித நீராடி விமோச்சனம் பெறுவதற்காக பல சாதுக்களும், முனிகளும், கோடிக்கணக்கான பக்தர்களும் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

Advertisement

பிப்ரவரி 26-ம் தேதி வரை இந்த கும்பமேளா நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பிரயாக்ராஜிற்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில், மகா கும்பமேளாவில் பூ மற்றும் ருத்ராட்ச மாலைகள் விற்று வந்த மோனாலிசா போன்ஸ்லே, அவர் குறித்து இன்ஸ்டா பிரபலம் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் சமூக வலைதளங்களில் பிரபலமானார். மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த மோனாலிசா போன்ஸ்லேவுக்கு வயதோ வெறும் 16 தான். ஆனால், மிளிரும் மாநிறத்தில், மனதை பறிக்கும் கண்களுடன், தனது எதார்த்தமான அழகால் சில நாட்களிலேயே அவர் இணையவாசிகளின் சென்சேஷன் ஆனார்.

சமூக ஊடகங்களில் தொடங்கி, தேசிய தொலைக்காட்சிகள் வரை மோனாலிசா குறித்து வெளியான செய்திகள், பட்டிதொட்டியெங்கும் அவருக்கு புகழை தேடித்தந்தது. மோனாலிசாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள நாள்தோறும் ஏராளமானோர் குவியத் தொடங்கிய நிலையில், அவரது புகழே அவருக்கு பெரும் தலைவலியாகவும் மாறிப்போனது. செல்ஃபி விரும்பிகளின் தொந்தரவால் மோனாலிசாவின் ருத்ராட்ச மாலை வியாபாரம் முடங்கிப்போக, மகளின் பாதுகாப்பு கருதி அவரின் தந்தை மோனாலிசாவை மூட்டைகட்டி சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பினார்.

Advertisement

ஊர் திரும்பிய மோனாலிசா போன்ஸ்லே புதிய இன்ஸ்டா மற்றும் யூ-டியூம் பக்கங்களைத் தொடங்கி, தனது ஒப்பனை வீடியோக்களை அதில் பதிவேற்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் சென்சேஷனான மோனாலிசா போன்ஸ்லே, மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவின் இன்ஸ்டா பதிவுதான். தான் எடுக்கவுள்ள "The Diary of Manipur" என்ற புதிய படத்தில், மோனாலிசாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளதாக சனோஜ் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

"The Diary of West Bengal" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சனோஜ் மிஸ்ரா தற்போது தனது புதிய படத்தின் கதாநாயகியாக மோனாலிசா போன்ஸ்லேவை தேர்தெடுத்துள்ளார். படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில், மோனாலிசாவையும், அவரது குடும்பத்தாரையும் அவர்களின் கிராமத்திற்கே சென்று படம் குறித்து விவரித்துள்ளார் சனோஜ் மிஸ்ரா.

எதிர்பாராமல் கிடைத்த பிரபலம் 16 வயதான மோனாலிசா போன்ஸ்லேவின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Advertisement
Tags :
Advertisement