குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அரசை எதிர்ப்பவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பாகிஸ்தானின் ராணுவச் செய்தி தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இஸ்லாமாபாத்தில் உள்துறை செயலாளர் குர்ராம் முகமது ஆகாவுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில், மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் ஜனநாயக நாடாகப் பாகிஸ்தான் விளங்குகிறது என்று வாய் கூசாமல், பொய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார். ஆனால், கள நிலவரமோ மோசமாக உள்ளது.
பாகிஸ்தானில் அஹ்மதியாக்கள் நிம்மதியாக வாழ முடியாது. தொடர்ந்து துன்புறுத்துவது, அவர்களின் வழிபாட்டுத் தலங்களை எரிப்பது, அவமானப் படுத்தி நாட்டை ஓட வைப்பது என அஹ்மதியாக்களைப் பழிவாங்குகிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும் ஒரே வேலை சாக்கடை, கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை மட்டுமே. மனிதர்களாகக் கூட கிறிஸ்தவர்கள் மதிக்கப்படுவதில்லை. பாகிஸ்தானின் ஒரு ஊரின் எல்லையில், சிறிய குடிசையில், ஒதுக்கப்பட்டவர்களாக வாழும் கட்டாயத்தில் தான் கிறிஸ்துவர்கள் கட்டாயத்தில் உள்ளனர்.
மத சிறுபான்மையினரைப் பாகிஸ்தான் எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு ஷியாக்கள் மற்றும் ஹசாராக்களின் மீது நடக்கும் கொலைகளே சான்றுகளாகும். பாகிஸ்தானில், இந்து சிறுமிகளைக் கடத்தி வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைப்பதும், வரும்படியாக அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற கட்டாயப்படுத்துவதும் ஒரு நீண்ட கால செயல் திட்டமாகவே நடந்து வருகிறது.
இது போன்ற குற்றவாளிகளுக்கு அரசே பாதுகாப்பு தருகிறது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் கேள்வி எழுப்பினால், புகார் கொடுத்தால், நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி தண்டிக்கப்படுகிறார்கள்.
ராணுவம் மற்றும் ஆளும் அரசின் உயர் தலைவர்களுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட மட்டுமே ஊடகங்கள் உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரங்களை அம்பலப் படுத்தும் பத்திரிகையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள்.மேலும், அவர்கள் பணிபுரியும் செய்தி நிறுவனங்கள் பெரும்பாலும் தடை செய்யப்படுகின்றன.
சமீபத்தில், பலூச் பத்திரிகையாளர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் குறிவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இது பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரத்தை எடுத்துக் காட்டுகிறது. மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிரான தனது மிருகத்தனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் பாகிஸ்தான் எப்போதுமே தவறான கதைகளைப் பரப்பும்.
வங்காளிகளுக்கு எதிராக இனப்படுகொலை செய்தது பாகிஸ்தான். பாகிஸ்தானின் அடக்குமுறை ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற வங்கத்தில் போராட்டம் நடந்தது. வங்கதேசத்தை ஆதரித்ததற்காக இந்தியாவை இன்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. அதேபோல், இந்தியா பலூச் ஆயுதக் குழுக்களை ஆதரிக்கிறது என்ற பாகிஸ்தான் பொய் கூறுகிறது. 1948 ஆம் ஆண்டு ராணுவ பலத்தைப் பயன்படுத்தி பலூசிஸ்தானை ஆக்கிரமித்தது இந்தியா அல்ல. பலூச் மக்களுக்கு எதிராக ஐந்து பெரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றது இந்தியா அல்ல. பலூச் பழங்குடிமக்கள் திடீர் திடீர் என்று காணாமல் போவதற்கு இந்தியா காரணம் அல்ல.
பலூச் தேசிய இயக்கம் மற்றும் பலூச் குடியரசுக் கட்சியின் தலைவர்களையும், பலூச் மாணவர் அமைப்பின் எண்ணற்ற உறுப்பினர்களையும் இந்தியா கடத்தி கொலை செய்யவில்லை. பலூச் ஆர்வலர்கள் மற்றும் தலைவர்களைக் கடத்தி கொலை செய்த பாகிஸ்தான் அரசு, பலூச் குடிமக்களைக் கொன்று புதைகுழிகளில் புதைத்துள்ளது. இந்தச் சூழலில், மக்களுக்கும் அவர்களின் மொழிக்கும் கூட வித்தியாசம் கூட தெரியாமல் பலூச் மக்களை "பலூச்சி" என்று குறிப்பிடும் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, அவர்கள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாகவும், அவர்களின் தலைவர்கள் யார் என்பதைத் தான் தீர்மானிப்பதாகவும் கூறுவது வேடிக்கை.
பாகிஸ்தானின் அறியாமையும் பலூச் பிரச்சினையைப் புரிந்து கொள்ளத் தவறியதும் அகமது ஷெரிப் சவுத்ரி பேச்சில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கூடுதலாக, பலூச் மக்களின் முக்கியத் தலைவரான டாக்டர் மஹ்ரங் பலோச்க்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் கூறியிருக்கும் பாகிஸ்தானுக்கு அவரது புகழ் அவரது மக்கள் போராட்டத்திலும் மக்களின் நம்பிக்கையிலும் வேரூன்றியுள்ளது என்பது தெரிந்திருக்க நியாயமில்லை.
பாகிஸ்தானில் அரசு அட்டூழியங்களுக்கு எதிரான போராளி முகமாக டாக்டர் மஹ்ரங் பலோச் மாறிவிட்டார். இந்த ஆண்டு டைம் பத்திரிகையின் 100 சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பலுசிஸ்தானில் தான் செய்துவரும் நீண்டகால அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசு ஆதரவு வன்முறையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது பொய் பழிபோடுவதை வழக்கமாகவே வைத்துள்ளது வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத பாகிஸ்தான்.