For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் - எல். முருகன்

11:00 AM Nov 05, 2025 IST | Murugesan M
குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின்   எல்  முருகன்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மத்திய  அமைச்சர் எல். முருகன் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

கோவை சர்வதேச விமான நிலையப் பகுதியில், கல்லூரி மாணவி ஒருவரை மூன்று சமூகவிரோதிகள் இணைந்து கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்று எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.

நாள்தோறும் பல்லாயிரம் பேர் உபயோகித்து வரக்கூடிய இந்த கோவை சர்வதேச விமானப் நிலையப் பகுதியைச் சுற்றிலும், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. கோவையின் மிகவும் முக்கியமான இப்பகுதியில், இளம்பெண் ஒருவர் மீது நடைபெற்றுள்ள இந்தப் பாலியல் வன்முறையானது, தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துகிறது என்று எல். முருகன் குற்றம் சாட்டினார்.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், இந்தக் கொடுமைக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

மாணவிக்கு நடந்த கொடுமை என்பது, திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையை தோலுரித்துக் காட்டுகிறது. குற்றவாளியை கைது செய்ததையே சாதனையாகக் கூறி, தமது ஆட்சி கடமை தவறியதிலிருந்து முதலமைச்சர் தப்பித்துக் கொள்ள முடியாது என்று எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.

கோவையில் மாணவிக்கு நடந்த கொடுமைக்கு, தமது ஆட்சியின் தோல்வி தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு சிறிதும் இல்லை. தமது அரசின் தோல்வியை மூடி மறைப்பதில் மட்டுமே அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதும் காவல்துறையின் அடிப்படைக் கடமை.

ஆனால், இதனையே ஒரு சாதனையாக முதலமைச்சர் கூறுவது பெரும் வருத்தத்துக்குரியது. தனது ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்காக அவர் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. மக்களைக் காப்பதும் குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதும் தான் காவல்துறையின் கடமை. அதனைச் செய்ய காவல்துறையும் தமிழக அரசும் தவறிவிட்டது. குற்றம் நடக்காமல் தடுக்க திராணியற்ற தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், கைது செய்ததை சாதனையாக பேசுவது வெட்கக்கேடான செயல்.

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இனி இத்தகைய கொடுமைகள் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியும், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது முதலமைச்சர் என்ன கூறினார்? இப்போதும் அதே பழைய பல்லவியையே பாடுகிறார்.

ஆனால் நடப்பது என்ன? தமிழகத்தில் பெண்கள் மீதான கொடூர குற்றங்கள் சிறிதளவும் குறைந்தபாடில்லை. தற்போது கோவையில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் பெருக்கெடுத்தோடும் மதுபானமும், போதைப் பொருட்களும் புதிய புதிய குற்றவாளிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய துளியும் அக்கறை இல்லாத திமுக அரசால், சட்டம்- ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை. குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய காவல்துறையும் செயலிழந்து நிற்கிறது. இந்த அலங்கோல ஆட்சி முடிவு பெற ஒரு சில மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள்ளாவது முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் விழித்துக் கொண்டால் சரி என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement