For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை - கொள்ளை!

07:45 PM May 20, 2025 IST | Murugesan M
குற்றவாளிகள் சிக்கிய பின்னணி   முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை   கொள்ளை

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வயதான முதியவர்களைக் குறிவைத்து கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்து இல்லத்தில் வசிக்கும் முதியவர்களை நோட்டமிட்டு அரங்கேற்றிய கொலைகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் புதூரில் உள்ள தோட்டத்து இல்லத்தில் வசித்து வந்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டனர்.

Advertisement

அவர்களின் நகைகள் மற்றும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைத்தும் அவர்களை நெருங்க முடியாமல் காவல்துறை திணறி வந்தது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி எனும் கிராமத்திலும் தோட்டத்து இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டு, அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

அடுத்தடுத்து அரங்கேறிய இந்த இரு படுகொலைச் சம்பவங்களும் மேற்கு மண்டலத்தையே உலுக்கியது. சிவகிரி கொலை வழக்கை விசாரிக்கவும் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த கொலை வழக்கின் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.  வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரச்சலூரை சேர்ந்த மாதேஸ்வரன், ரமேஷ் மற்றும் அச்சியப்பன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் கொலைச்சம்பவங்களை அரங்கேற்றியவர்கள் இவர்கள் தான் என்பதும் கண்டறியப்பட்டது.

தொடர் கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே கடந்த  2015 ஆம் ஆண்டு பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதம் சிறையிலிருந்திருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தோட்டத்தில் தேங்காய் உரிக்கும் வேலைக்குச் சென்று அங்குத் தனியாக வசிக்கும் முதியவர்களை நோட்டமிட்டு இரவு நேரத்தில் இல்லத்திற்குள் புகுந்து அவர்களைக் கொலை செய்துவிட்டு வீட்டிலிருக்கும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதைக் குற்றவாளிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை உருக்கிக் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதியின் உத்தரவின் படி  வரும் ஜூன் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு, திருப்பூர் என மேற்கு மண்டலத்தில் அரங்கேறி வந்த தொடர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களையும் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது ஓரளவுக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது.

Advertisement
Tags :
Advertisement