கூலி உயர்வு பெற்றுத்தர வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் : மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி!
கோவையில் மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்றுத்தர வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 29 நாட்களாகத் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி இயங்கும் பகுதிகளில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதையடுத்து போராட்டம் நடத்தி வந்த விசைத்தறி உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதமாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி இரவு முதலே விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.