For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!

08:30 PM May 24, 2025 IST | Murugesan M
கேள்விக்குறியான வாழ்வாதாரம்   நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு

வடசென்னை பகுதியின் நுழைவாயிலான கணேசபுரம் சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதோடு நூற்றுக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் மேம்பாலப் பணிகள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த கணேசபுரம் சுரங்கப்பாதை தான் வடசென்னையின் பிரதான நுழைவாயில். வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை என பல்வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பொதுமக்களுக்குப் பிரதான வழியாகவும், முக்கியமான சுரங்கப்பாதையாகவும் இந்த கணேசபுரம் பாலமே அமைந்திருக்கிறது.

Advertisement

ஒவ்வொரு மழையின் போதும் கணேசபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதும், அதனால் பாதையைக் கடக்க முடியாமல் தவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. பொதுமக்களின் நீண்டகால போராட்டத்திற்குப் பின் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் அதற்காக 226 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது.

2022 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த 18 மாதங்களில் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.  ஆனால் ஆமைவேகத்தில் நடைபெற்றுவரும் பணிகள் அப்பகுதி பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதோடு அச்சாலையில் கடை வைத்திருந்த வணிகர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement

மேம்பாலத்திற்கான பணிகள் தொடங்கிய பின் அப்பாதை அடைக்கப்பட்டிருக்கவைப்பதால் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர், பணிக்குச் செல்வோர், அவசரத் தேவைகளுக்காக மருத்துவமனை செல்வோர் எனப் பலரும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குச் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேம்பாலம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கி மூன்றாண்டுகள் கடந்தும் 50 சதவிகித பணிகள் கூட நிறைவடையாமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட சுணக்கமே காலதாமதத்திற்குக் காரணம் எனவும், பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement