கைலாஷ் - மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம் - இந்தியா, சீனா முடிவு!
இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் சந்தித்து கொண்டதாகவும், அப்போது இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை தற்போது அமல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்க இருநாடுகளும் முடிவெடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 2025 கோடை காலம் முதல், கைலாஷ் - மானசரோவர் யாத்திரை தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக இரு நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவும் விரைவில் சந்தித்து நடைமுறைகளை வகுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.