For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

08:55 PM Jun 05, 2025 IST | Murugesan M
கொடூரமான வான் வேட்டைக்காரன் r 37m அதி நவீன ஏவுகணை   இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு

அமெரிக்க ஆயுதங்களை வாங்கவேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த  R-37M ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்க ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் சிறப்பம்சம் என்ன? இந்த ஏவுகணையை இந்தியா வாங்குவதைப் பார்த்து அமெரிக்காவும் சீனாவும் ஏன் அஞ்சுகின்றன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா- உக்ரைன் போரின் ஆரம்பத்தில், சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அப்பால் உக்ரைனின் எந்தப் பகுதிகளையும் ரஷ்யா தாக்காமலிருந்தது. ரஷ்யாவுக்கு எதிராக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் மற்றும் போருக்கான நிதியை வாரி வழங்கத் தொடங்கியது.

Advertisement

இதனையடுத்து, ரஷ்யாவின் போர் விமானங்கள் உக்ரைனின் வான் பாதுகாப்பைக் கிழித்துக் கொண்டு ஆக்ரோஷமாக வேட்டையாடத் தொடங்கின. முதன்முதலாக, ரஷ்யாவின் புதிய AIR-TO-AIR ஏவுகணையின் தாக்குதலை  அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் கண்டன. அந்த புதிய ஏவுகணை R-37M என்று அடையாளம் காணப் பட்டது.

R-37M  உலகின் மிக நீண்ட தூர வான்-வான் ஏவுகணையாகும். இது எந்த நேரத்திலும், அனைத்து கோணங்களிலும், மின்னணுப் போர் நிலைமைகளில், எப்படி பட்ட  ஏவுகணை தாக்குதல்களையும் துல்லியமாக அழிக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணையாகும்.

Advertisement

Beyond Visual Range (BVR) ஏவுகணையான R-37M எதிரியின் இலக்குகளை நேரடியாகக் கண்காணிக்காமலேயே காற்றில் தாக்கும் திறன் கொண்டதாகும். இதன் பொருள் நீண்ட தூரத்திலிருந்து முதலில் தாக்குவதும், ஆனாலும் ஒருபோதும் எதிரி கண்ணில் படாமல் இருப்பதும் ஆகும்.

ரஷ்ய கப்பல் வடிவமைப்பு நிறுவனமான விம்பெல் டிசைன் பணியகம் (Vympel Design Bureau) உருவாக்கிய இந்த ஏவுகணை, அமெரிக்காவின் Airborne Warning and Control System, எரிபொருள் டேங்கர் விமானங்கள் மற்றும் அதிநவீன போர் விமானங்களை அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.

R-37M ஏவுகணை 400 கிலோமீட்டர்  வரை தூரம் சென்று தாக்கக்கூடியது. ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில், மணிக்கு 7,400 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து தாக்கக் கூடியதாகும்.  510 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை நான்கு மீட்டாருக்கு மேல் நீளம் உடையதாகும்.  60 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களைச் சுமந்து செல்லக்  கூடிய இந்த ஏவுகணையை AA-13 அச்சுமுனை என்று நேட்டோ அழைக்கிறது.

இந்நிலையில், கொடூரமான வேட்டைக்காரன் என்று கூறப்படும் மிகவும் சக்திவாய்ந்த   R-37M ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்க ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், இந்த ஏவுகணையை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அனுமதியையும் வழங்கியுள்ளார்.

இந்த ஏவுகணையை Su-30MKI, Su-35, MiG-31BM, Su-57 உள்ளிட்ட போர் விமானங்களில் பயன்படுத்த முடியும்.   இதன் மூலம், மிக நீண்ட தூரத்திலிருந்தே எதிரி விமானங்களைத் துல்லியமாக அழிக்கக் கூடிய திறனை இந்தியா மேம்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் F-16 விமானங்களையே பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தான், தங்களைத் தாக்கியது என்னவென்று அறியும் முன்பே கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் இருந்தே  F-16  உட்பட அதிநவீன போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரம்மோஸ் ஏவுகணையைப் போல R-37M ஏவுகணைகளையும் பிற நாடுகளுக்கும் விற்பனை செய்ய இந்தியாவும் ரஷ்யாவும் பரிசீலித்து வருகின்றன.

Advertisement
Tags :
Advertisement