For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கொடைக்கானலில் தனித்துவமிக்க சூரிய ஆய்வகம்!

07:50 PM Jun 21, 2025 IST | Murugesan M
கொடைக்கானலில் தனித்துவமிக்க சூரிய ஆய்வகம்

கொடைக்கானலில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட சூரிய ஆய்வகம் இன்றளவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. பெருகிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப சூரியனைக் கண்காணிப்பதில் தனித்துவமிக்கதாக திகழும் கொடைக்கானல் சூரிய ஆய்வகம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த சூரிய ஆய்வகம் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த இந்திய வானிலை ஆய்வுமையத்தின் உதவியோடு கொடைக்கானலில் உருவான இந்த சூரிய ஆய்வகம் 125 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

Advertisement

சூரியனைப் படம் பிடிப்பதற்கும், அதன் வெப்பத்தை ஆய்வு செய்வதற்கும் இன்றியமையாத பங்களிப்பை வழங்கி வரும் இந்த சூரிய ஆய்வகம், காஸ்மிக் கதிர்கள், நட்சத்திர இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் ஆய்வு செய்யத் தொடங்கியது

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் 6 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டு சூரியனைக் கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் மேகக் கூட்டங்கள் இல்லாத நேரத்தில் சூரியனும் பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் காலநிலை மாற்றங்களும் இங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

Advertisement

கடந்த 125 ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்ட தகவல் அனைத்தும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கும் வகையில் எளிதான முறையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. 125 ஆண்டுகள் கடந்தும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சூரிய ஆய்வகத்தின் பெயரில் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.

வானம் தெளிவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் சூரியனைச் சரியாகக் கண்காணித்து அதன் தரவுகளைச் சேமிக்கும் அளவுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த ஆய்வகத்தில் உள்ளன. கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்லும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் விரும்பி பார்க்கும் சுற்றுலாத்தலமாகவும் இந்த சூரிய ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.

Advertisement
Tags :
Advertisement