For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால் பாதிப்பு : கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

06:35 PM Mar 24, 2025 IST | Murugesan M
கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால் பாதிப்பு   கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவுவதோடு, சலவைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் குறித்தும், அதனால் பாதிக்கப்படும் சலவைத் தொழிலாளர்கள் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு திருச்சியின் மிக முக்கியமான அடையாளங்களில் பிரதானமாக உள்ளன. அத்தகைய ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பகுதியில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

Advertisement

கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு வராத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால், ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement

அதிலும் குறிப்பாக, நம்பர் ஒன் டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் வசித்துவரும் ஐநூறுக்கும் அதிகமான சலவைத் தொழில் செய்யும் குடும்பங்கள் இந்த கழிவுநீரால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் அதில் சலவை செய்யப்படும் துணிகளில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி பொதுமக்கள் சலவைக்கு தங்கள் துணிகளைத் தர தயங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது

கொள்ளிடம் ஆற்றை நம்பியே தொழில் செய்து வரும் சலவைத் தொழிலாளர்களுக்குச் சருமப் பிரச்சனையும் அண்மைக்காலமாக எழத் தொடங்கியிருக்கிறது. வாழ்வாதாரத்தோடு தங்களின் உடல்நலத்தையும் பாதுகாக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் எனச் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement
Tags :
Advertisement