சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசின் மூலம் அமைக்கப்படும் தொழில்நுட்ப மையங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
2024 -25 ஆம் ஆம் நிதியாண்டில் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஆட்டோ மொபைல் மற்றும் டெக்ஸ்டைல், பொறியியல் சார்ந்த உபகரணங்களை ஏற்றுமதி செய்து கோவை மாவட்டம் சாதனை படைத்துள்ளது. உலகளவில் தொழில்துறை நிறுவனங்களுக்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்க டெக்னிக்கல் சப்போர்ட், டெஸ்டிங், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை அவசியமானதாக விளங்குகிறது.
அத்தகைய அவசியம் தான் கோவை மாவட்டம் அரசூரில் மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நுட்ப மையம் அமைய முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் பொது மற்றும் தனியார் நாட்டாண்மையில் உருவாக்குதல், செயல்படுத்துதல், பரிமாறுதல் ஆகியவை மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் தமிழகத்தின் கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட 18 இடங்களில் இந்த தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தொழில்துறையில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்பையும், வளர்ச்சியையும் இந்த தொழில்நுட்ப மையங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கை வகிக்கும் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மையப்படுத்தி மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் அமைந்திருக்கும் இந்த சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மையங்கள் ஒட்டுமொத்த தொழில்துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.