சீனாவை கைகழுவும் பாக்.? : ட்ரம்புடன் அசிம் முனீர் கை கோர்த்த பின்னணி!
அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் சந்திப்பும் விருந்தோம்பலும், பல்வேறு கேள்விகளையும் யூகங்களையும் உருவாக்கியுள்ளது. ஈரானையும் சீனாவையும் கைகழுவி விட்டு,பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் சாய்கிறதா? தெற்காசியாவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த பாகிஸ்தான் தோளில் அமெரிக்கா ஏறுகிறதா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது பற்றிய ஒரு விரிவான செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
இஸ்ரேல்- ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கனடாவில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில், இஸ்ரேலுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள ஸ்திரமற்ற நிலைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரானே முக்கிய காரணமாக உள்ளது என்று குற்றம்சாட்டி உள்ள ஜி 7 நாடுகளின் தலைவர்கள், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் தெளிவு படுத்தியுள்ளனர்.
மேலும், தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று கூறியதோடு, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முழு ஆதரவு தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். முன்னதாக புதுப்பிக்கப் பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்ட ஈரான், அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த ,பாகிஸ்தானின் நிலப்பரப்பையும் வான் வெளியையும் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அதன் காரணமாகவே, பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீருக்கு, வெள்ளை மாளிகையில் மதிய விருந்தளித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று கூறப்படுகிறது.
முதலில் ஒரு மணி நேரம் என்று திட்டமிடப்பட்ட ட்ரம்ப், அசிம் முனீர் பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது. இதுவே, இந்த பேச்சுவார்த்தை ஒருமித்த கருத்துடன் ஆழமாக நடித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்தச் சந்திப்பில், இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும் வகையில் வர்த்தகத்தை மேம்படுத்தவும், பொருளாதாரம், தாதுப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு,தொழில்நுட்பம்,எரிசக்தி, கிரிப்டோ கரன்சி என பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக ,பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவின் அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலைவரும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகருமான ஜெனரல் அசிம் மாலிக்கும் இந்த சந்திப்பில் உடனிருந்ததாகக் கூறப் பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சந்திப்பில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரோ,அரசு அதிகாரிகளோ இடம்பெறாதது பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ஒரு ஜனநாயக நாடு தனது இராணுவ அதிகாரிகளை மட்டும் இதுபோன்ற சந்திப்பிற்கு எப்படி அனுப்ப முடியும் என்று முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன் மசாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அசிம் முனீரைச் சந்தித்த பிறகு, ஈரானைத் தாக்குவீர்களா என்ற கேள்விக்கு, செய்யலாம், ஒருவேளை செய்யாமலும் இருக்கலாம் என்று ட்ரம்ப் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல்-ஈரான் போரில் களம் இறங்குவதா, இல்லையா என்பதை 15 நாட்களுக்குள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானின் உதவியைப் பெறும் சில பயங்கரவாத அமைப்புக்களைத் தவிர, எந்த இஸ்லாமிய நாடும் ஈரான் ஒரு அணுசக்தி நாடாக உருவெடுப்பதை விரும்பவில்லை. குறிப்பாகப் பாகிஸ்தான் விரும்பவில்லை. 900 கிலோமீட்டர் எல்லையை ஈரானுடன் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், பலூச் அருகிலுள்ள பகுதிகளில் ஜிஹாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகரிக்க ஈரான் காரணம் என்று நம்புகிறது.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈரானுக்குப் பாகிஸ்தான் உதவுவதை ஒருபோதும் விரும்பாத அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போரிலிருந்து பாகிஸ்தானை விலக்கி வைக்க ,அசிம் முனீரை பயன்படுத்துகிறது. ட்ரம்ப் அசிம் முனீர் சந்திப்பு, எப்போதும் தனது நண்பனான சீனாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் வழி மாறுவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
'சீனா- பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை' என்பது, சீனா தனது லட்சியமாக உருவாக்கி வரும் பட்டுப்பாதை திட்ட முன்னெடுப்பின் ஒரு பகுதி ஆகும். இந்த திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் சீனா அடைந்துள்ளது. மேலும், அணு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், போர்விமானங்கள் மற்றும் ஏவுகணைகளையும் உருவாக்கப் பாகிஸ்தானுக்குச் சீனா உதவி வருகிறது. பாகிஸ்தானின் மொத்த இராணுவ இறக்குமதியில் சீனாவின் பங்கு 45 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு, எஃப்-16 போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்கு வழங்கிய அமெரிக்கா அவற்றைப் பராமரிக்கவும் நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் சர்வதேச நிதி ஆணையத்தின் கடன் தொகையைப் பாகிஸ்தான் பெறுவதற்கும் அமெரிக்கா உதவியுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில், இப்போது வரை பாகிஸ்தான் சாமர்த்தியமாக நடித்து வருகிறது. இதன் பயனாக இரு நாடுகளிடம் இருந்தும் பாகிஸ்தானுக்குப் பொருளாதார உதவிகள் கிடைத்து வந்தன. கைமாறாக அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தானிடம் இருந்து ஏதாவது பலன்களைப் பெற்றுக் கொண்டன.
அசிம் முனீர் அமெரிக்காவுக்கு ஆதரவாகவே இருப்பார் என்றும், சீனாவைக் கொஞ்சம் தள்ளிவைப்பார் என்று கூறப்படுகிறது. ட்ரம்பின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியருக்கும், மருமகன் ஜாரெட் குஷ்னருக்கும் சொந்தமான வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் நிறுவனத்துடன் பாகிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட கிரிப்டோ கவுன்சில் இடையே கிரிப்டோகரன்சி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கிரிப்டோ கவுன்சிலில் ராணுவ தளபதி அசிம் முனீருடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே பாகிஸ்தான் பொருளாதார வழித் தடத்துக்காக ஏராளமான பணத்தைச் செலவழித்துள்ள சீனாவுக்கு, ட்ரம்ப் அசிம் முனீர் சந்திப்பு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.