For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு - ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

09:49 AM Jul 08, 2025 IST | Murugesan M
சீனாவை மிரட்டும் இந்தியா   கடலுக்கடியில் கண்காணிப்பு    ஆஸி  யுடன் கைகோர்ப்பு

இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையினரின் இருப்பும் ஆதிக்கமும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா தனது கடற்படையை மேலும் மேலும் வலிமைப்படுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒரு காலத்தில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இருந்த முக்கியத்துவம்,சமீப காலமாக தற்போது இந்தியப் பெருங்கடலுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, உலக வல்லரசு நாடுகள் இடையே நிலவும் போட்டியின் மையப்பகுதியாக இந்தியப் பெருங்கடல் மாறியுள்ளது.

Advertisement

இந்தியப் பெருங்கடல் பகுதி 3 கண்டங்களை உள்ளடக்கிய 28 நாடுகளைக் கொண்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் இந்தியப் பெருங்கடல் சர்வதேச வர்த்தகத்துக்கான ஒரு முக்கிய பாதையாகும்.

உலகின் 70 சதவீத கடல் வர்த்தகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்குக்கும், இந்தியப் பெருங்கடல் வழியேதான் நடக்கிறது. இந்தியாவின் 95 சதவீத வர்த்தகம் இந்தியப் பெருங்கடல் வழியாக நடைபெறுகிறது. அதனாலேயே இந்தப் பகுதியில் தானாகவே கடுமையான போட்டி உருவாகி உள்ளது.

Advertisement

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாத சீனா, அமெரிக்க  விமானம் தாங்கி கப்பல்களைத் தாக்கும் வகையில் Air Denial Missile தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த தொழில் நுட்பத்தைச் சீனா பாகிஸ்தானுக்கும் வழங்க முடிவெடுத்துள்ளது. மேலும், இது தவிர, பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கவும் சீனா தயாராக உள்ளது.

இப்படி, இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையினரின் இருப்பும் ஆதிக்கமும் அதிகரித்து வரும் நிலையில்,  வர்த்தகம் மட்டுமின்றி தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் முதல் வங்காள விரிகுடா வரையிலான கடல் பாதுகாப்பில் இந்தியா  தனது திறனை மேம்படுத்தி வருகிறது.

முதல்முறையாக, 2022-ஆம் ஆண்டில் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதல் விமானந்தாங்கி கப்பலை இந்தியா அறிமுகம் செய்தது. பயன்பாட்டில் உள்ள ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்தியாவின் இரண்டாவது விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும்.

கடந்த  ஜனவரி மாதம் 15-ஆம் தேதி, மும்பையில் உள்ள மசாகோன் கப்பல் கட்டும் துறைமுகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மூன்று போர்க் கப்பல்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐஎன்எஸ் வாக்‌ஷீர் நீர்மூழ்கிக் கப்பல், ஐஎன்எஸ் சூரத் மற்றும் ஐஎன்எஸ் நீலகிரி பி17ஏ ஆகிய  மூன்று போர்க்கப்பல்கள்  ஒரே நேரத்தில் சேர்க்கப்பட்டன.

இந்தியாவிடம் மொத்தம் 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் நவீனமானவை. மீதமுள்ள 10 நீர்மூழ்கிக் கப்பல்கள் 29 முதல் 34 ஆண்டுகள் வரை பழமையானவை. கூடுதலாக மேலும் ஆறு ஆறாம் தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களைக் கடற்படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்  பட்டு வருகின்றன.

மூன்று போர்க்கப்பல்களையும் தயாரிக்க இந்தியாவுக்கு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில்,வெறும் 10  மாதங்களில் இத்தகைய போர்க்கப்பல்களைச் சீனா தயாரித்து விடுகிறது. 12 மாதங்களில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் திறனும் சீனாவிடம் உள்ளது.

முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்  ஐ.என்.எஸ் அரிஹந்த்  2016 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஆரம்பத்தில் 750 கிலோமீட்டர்  தூரம் சென்று தாக்கக் கூடிய  K-15 ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல், இப்போது 3,500 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் கொண்ட K-4 ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிகாட், கடந்தாண்டில் சேர்க்கப்பட்டது. 6,000 டன் எடையுள்ள ஐஎன்எஸ் அரிகாட், வான், நிலம் மற்றும் கடலில் உள்ள தளங்களில் இருந்து அணுஆயுத ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்டதாகும்.

அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்றாவதாக ஐ.என்.எஸ் அரிதமான் (INS Aridhaman) விரைவில் இந்தியக் கடற்படையில் இணைக்கப் படவுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனா உருவாக்கி வரும் உத்திக்கு முத்து மாலை (String of Pearls) என்று பெயர். இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் தேவைப்படும் போது, ராணுவ தேவைகளுக்காகப் பயன்படுத்தும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பு அம்சங்களைத் துறைமுகங்களுக்கு வழங்குவது போன்ற பணிகளில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தனது ஆற்றல் மற்றும் ராணுவ நலனைப் பாதுகாக்க, மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையிலான கடல் பகுதிகளில், பல நாடுகளுடன் வர்த்தக உறவுகளையும் சீனா மேம்படுத்தி வருகிறது.

குறிப்பாக, ஆப்பிரிக்காவில் ஜிபூட்டியிலும் (Djibouti), பாகிஸ்தானில் குவாதரிலும் துறைமுகங்களைக் கட்டி வருகிறது சீனா. ஏற்கெனவே, இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்குச் சீனா எடுத்துள்ளது.

மியான்மரில் உள்ள கோகோ தீவிலும், சீன கடற்படை செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் மற்றும் செங்கடல் கடற்கரையில் சூடான் துறைமுகத்தையும் சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் பகுதியாக, இந்த துறைமுகங்களைப் பயன்படுத்திவரும் சீனா, தனது கடற்படையையும் நிறுத்தி, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சீனாவின் இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா "வைரங்களின் நெக்லஸ்" உத்தியைச் செயல்படுத்தி வருகிறது.  "வைரங்களின் நெக்லஸ்" என்பது இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உத்தி அல்ல. மாறாக,அரசின் செயல்பாடுகளை எடுத்துச் சொல்ல பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் ஆகும்.

2015 ஆம் ஆண்டில் சீஷெல்ஸ், அசம்ப்ஷன் தீவில் கடற்படை தளம் அமைத்த இந்தியா  2016 ஆம் ஆண்டில் ஈரானின் சபாகர் துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுத்தது.
2018ம் ஆண்டில், சிங்கப்பூரில்  சாங்கி கடற்படைத் தளத்தை அமைத்த இந்தியா, இந்தோனேசியாவில் சபாங் துறைமுகத்தையும், ஓமனில் டக்ம் துறைமுகத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் இந்தியா, பழைய கடற்படை தளங்களை மேம்படுத்துவதோடு, இந்தியப் பெருங்கடலில் புதிய கடற்படை தளங்களை உருவாக்கி உள்ளது. மங்கோலியா,ஜப்பான்,வியட்நாம் ஆகிய நாடுகளுடனும் இந்தியா முக்கிய ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய QUAD அமைப்பை முன்னெடுத்து செல்வதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. சீனாவுக்கு எதிராக, கடல்சார் மற்றும் நாடு கடந்த பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பங்களின் மேம்பாடு உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்பை QUAD நாடுகள் வழங்கிக் கொள்கின்றன.

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடலுக்கடியில் கண்காணிப்பை மையமாகக் கொண்ட முதல் இருதரப்பு பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

இது, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு (DSTG) மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு ஆராய்ச்சி முயற்சி ஆகும்.

கடலுக்கடியில் கண்காணிப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து உருவாக்குவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவுடனான இந்தக் கூட்டு முயற்சி, கடலுக்குள்ளே வளர்ந்து வரும் போர்க்கள சவால்களை எதிர்கொள்ளவும் இந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்கவும் இந்தியா எடுத்திருக்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.

Advertisement
Tags :
Advertisement