For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!

07:15 PM Jun 10, 2025 IST | Murugesan M
சுகாதார சீர்கேட்டின் உச்சம்   நோய்களை உருவாக்கும்  கோயம்பேடு சந்தை

சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்து கிடக்கும் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையில் கொட்டப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று தான் இந்த கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் அங்காடி. சென்னை மட்டுமல்ல அதன் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சிறு,குறு வணிகர்களின் வியாபாரச் சந்தையாகவும் இந்த கோயம்பேடு சந்தை விளங்கி வருகிறது.

Advertisement

295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோயம்பேடு சந்தையில் சுமார் 4 ஆயிரம் கடைகள் இயங்கி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த சந்தையில் கொட்டப்பட்டிருக்கும் அழுகிய பழங்களும், காய்கறிகளும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

விற்பனையாகாத பழங்களும், காய்கறிகளும் அழுகிய நிலையில் கோயம்பேடு வளாகத்திற்குள்ளாகவே கொட்டப்படுவதால் அதிகளவு துர்நாற்றம் வீசுவதோடு, அதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படும் கோயம்பேடு சந்தையில் நிலவும் இந்த சுகாதார சீர்கேடு, அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Advertisement

அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொட்டுவதற்குத் தனி இடம் ஒதுக்குவதோடு, அவ்வாறு கொட்டப்படும் பழங்களையும், காய்கறிகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சுகாதார சீர்கேடுகள் நிறைந்த கோயம்பேடு சந்தைக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையை முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டதாக சிஎம்டிஏ நிர்வாகத்தின் மீது புகார் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று ஒருபுறம் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் கோயம்பேடு சந்தையில் கொசுக்களால் உருவாகும் டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும் அசாதாரண சூழலும் உருவாகியுள்ளது.

எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகமும் தமிழக அரசும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement