For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சென்னையில் ரூ.641 கோடி செலவில் பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் : நிதின் கட்கரி

04:42 PM Mar 13, 2025 IST | Murugesan M
சென்னையில் ரூ 641 கோடி செலவில் பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும்   நிதின் கட்கரி

சென்னையில் ரூ.641.92 கோடி செலவில் பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர் கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

Advertisement

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட நாடு முழுவதும் 35 இடங்களில் பலவகையான சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன என்றார். தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு முகமைகளால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பலவகையான சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களில் கிடங்கு, ரயில்வே தொடர்பு, ரயில் முனையம், சுங்கம், சரக்குப் பெட்டக முனையம், டிரக் நிறுத்தம், பெருந்திரளாக சரக்கு இருப்பு வைக்கும் இடம், எரிபொருள் நிலையம், மின்சார வாகன மின்னேற்று நிலையம், தங்கும் விடுதி, உணவு விடுதி, திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

Advertisement

தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள இத்தகைய பூங்காக்களை தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து நிர்வாக நிறுவனம், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம், சென்னை துறைமுக ஆணையம், தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு கழகம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு  துணை நிறுவனம் அமைக்கும் என்று கூறினார்.

சென்னையில் அமைக்கப்படவுள்ள  சரக்குப் போக்குவரத்துப் பூங்காவுக்கான மொத்த செலவு ரூ.641.92 கோடியாகும். இதில் தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து நிர்வாக நிறுவனத்தின் பங்கு 40.18 சதவீதமாகவும், ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் பங்கு 26 சதவீதமாகவும், சென்னை துறைமுக ஆணையத்தின் பங்கு 26.02 சதவீதமாகவும், தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு கழகத்தின் பங்கு 7.8 சதவீதமாகவும் இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

மொத்த செலவுத் தொகையில் தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து நிர்வாக நிறுவனம் ரூ.257.90 கோடியையும், தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு கழகம் ரூ.50 கோடியையும் திட்டத்தை செயல்படுத்தும் சிறப்பு துணை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளன என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்த சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து செலவு குறைவதோடு, சாலையிலிருந்து ரயில் பாதைக்கும், ரயில் பாதையிலிருந்து சாலைக்கும் தடையின்றி சரக்குகளை கொண்டு செல்லவும் முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சரக்குகளை கையாள நவீன மற்றும் எந்திரப் பயன்பாடு இருப்பதால் சரக்குகளை கையாளும் செலவும் குறையும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்தப் பூங்காக்களிலேயே மிகப்பெரிய கிடக்குகள் இருப்பதால் சரக்குகளை மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று இருப்பு வைப்பதற்கான செலவும் குறையும் என்ற விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement