செவிலியர் பற்றாக்குறையால் தமிழகம் தவிக்கிறது : மாநில நர்சிங் கவுன்சில் தகவல்!
தமிழகம் செவிலியர் பற்றாக்குறையால் தவிக்கிறது என்றும், கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மாநில நர்சிங் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தமிழகம் 65 ஆயிரம் செவிலியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிந்தைய காலத்தில் தமிழகத்தில் செவிலியர்களின் வேலை இழப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், சென்னை, கோவை போன்ற நகரங்களில் மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கினாலும், வெளிநாடுகளில் பணிபுரியவே செவிலியர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் இல்லை என்றும், ஐசியுவில் இரவுப் பணியில் ஒரே ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றும் நிலை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்ட 11 அரசு செவிலியர் கல்லூரிகளைத் தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் மாநில நர்சிங் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.