For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!

08:25 PM Jun 21, 2025 IST | Murugesan M
சோழர் கால கல்வெட்டுகள்   தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கும் செலக்கரச்சல் கிராமத்தில் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொன்மைமிக்க கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் சேகரித்து வைத்திருக்கும் கல்வெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, அப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்திருக்கிறது இந்த செலக்கரச்சல் கிராமம். தொன்மை மிக்க பகுதியாகக் கூறப்படும் இக்கிராமத்தின் குளக்கரையில் நூற்றாண்டுகள் பழமையான செப்புத் திருமேனிகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த பல்வேறு கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

சோழர்கள் காலத்தில் செலக்கரச்சல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் பூஜை நடத்துவதற்காகப் பெறப்பட்ட வருவாய் குறித்த விவரங்கள் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு படையெடுப்புகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன கல்வெட்டுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செலக்கரச்சல் கிராமத்தின் வீடுகள், குளக்கரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சேகரிக்கப்பட்டு அங்குள்ள சிவன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்பதால் தமிழக அரசின் தொல்லியல் துறை அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

மேலும் செலக்கரச்சல் பகுதியில் மேலும் பல்வேறு வரலாற்றுத் தொன்மை மிக்க சான்றுகள் புதைந்திருக்கக் கூடும் என்பதால் தொல்லியல் துறை விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழமன்னர்களான ராஜேந்திர சோழன், விக்ரம சோழன் உள்ளிட்ட பல மன்னர்கள் நன்கொடை கொடுத்தத்தற்கான சான்றுகளும் தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் வெள்ளலூர் சாலையில் உள்ள குளமும், அவற்றால் விளையும் நிலமும் சிவன் கோயிலுக்குச் சொந்தமானது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தகவல்களும் அக்கல்வெட்டில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொன்மைமிக்க நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் அடுத்தடுத்து தென்படும் செலக்கரச்சல் கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வை மேற்கொண்டு இக்கிராமத்தின் சிறப்புகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement