For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம் : மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் அமெரிக்கா?

08:20 PM Nov 01, 2025 IST | Murugesan M
டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம்   மீண்டும் அணு ஆயுத  சோதனைகளை  தொடங்கும் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அணுஆயுத சோதனைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது, உள்நாட்டில் அதிர்ச்சியையும் உலக நாடுகளிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்...

உலக அரசியல் களத்தில் அமெரிக்கா மிக வலிமையாகச் செயல்பட்டு வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ரீதியிலான போட்டிகளுக்கு மத்தியில், தனது அணு ஆயுத திறன்களை மீண்டும் முன்னிறுத்த அமெரிக்கா முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்க அணு ஆயுத படைகளின் தலைமை பொறுப்புக்கு, அந்நாட்டின் கடற்படை துணை அட்மிரல் ரிச்சர்ட் கோரெல் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

அதற்கான செனட் விசாரணை நடைபெறுவதற்கு முன்பே அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் அணு ஆயுத சோதனை தொடர்பான கருத்துக்கள், ஒருபுறம் அமெரிக்காவுடைய சக்தி வெளிப்பாட்டின் முயற்சியாகக் கருதப்பட்டாலும், மற்றொருபுறம் அது உலகளாவிய பதற்றத்தையும், அச்ச உணர்வையும் உருவாக்கியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவது புதிய ஆயுத போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா தனது பாதுகாப்பை வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி, உலக அமைதிக்கான சமநிலையை சீர்குலைக்கும் அபாயமாக மாறியுள்ளது. இதற்கிடையே, டிரம்பின் கருத்துக்கள் அமெரிக்காவின் அணு ஆயுதங்களின் விநியோக அமைப்புகளைச் சோதிப்பது பற்றி இருக்கலாம் என அமெரிக்க நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

அதிபர் டிரம்ப் ஏற்படுத்திய இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன் வெள்ளை மாளிகையில் செனட் ஆயுத சேவைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் டிரம்பின் கருத்தை விமர்சித்துக் கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலளித்து பேசிய கோரெல், தனது பங்கு ஆலோசனைகளை வழங்குவதாக மட்டுமே இருக்கும் என எச்சரிக்கையுடன் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அணு ஆயுதங்கள் சரியாகச் செயல்படுவதை உறுதிபடுத்த பரிசோதனைகள் அவசியம் என்ற துணை அதிபர் ஜெ.டி.வான்ஸின் கருத்து, உள்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வடகொரியா மட்டுமே கடந்த 2017-ம் ஆண்டு அணு ஆயுத பரிசோதனையை முழுமையாக நடத்தியுள்ளது. ரஷ்யா அண்மையில் புதிய அணு ஆயுதங்களைச் சோதித்திருந்தாலும், முழு அளவிலான வெடிப்புப் பரிசோதனைகளை ரஷ்யா மேற்கொள்ளவில்லை.

பிற நாடுகள் அணு ஆயுத சோதனையைச் செய்யும் பட்சத்தில், தாங்களும் செய்வோம் என அப்போது அதிபர் புதின் எச்சரித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்கா தனது அணு ஆயுத பரிசோதனை தடை உறுதிமொழியைக் கடைபிடிக்க வேண்டும் எனச் சீனா வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அதிபர் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுக்க முயல்வதாகக் கூறும் புவிசார் அரசியல் நிபுணர்கள், சீனாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க இந்த முயற்சி பலனளிக்காது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அமெரிக்கா ஆயிரத்து 30 அணு ஆயுத சோதனைகளைச் செய்துள்ள நிலையில், நெவாடா மாநிலம் அதில் பாதிக்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் செனட்டர் ஜாக்கி ரோசென் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள அனுமதி மறுத்தார்.

இந்நிலையில், அதற்கு மாறாகத் தற்போது அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனைக்குத் திரும்புவது, அந்நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பதிலாக உலகளாவிய பதற்றத்தையே பெருமளவு அதிகரிக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement