டி20 கிரிக்கெட் போட்டி : 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ஏற்கனவே இந்திய அணி 3-க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், நேற்று 5-வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
டாஸை வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் 135 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்தன. இதன் மூலம் 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.