For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

08:35 PM Jun 20, 2025 IST | Murugesan M
தண்ணீர் லாரியால் கலைந்த கனவு   அலட்சியத்தால் பறிபோன உயிர்

சென்னை பெரம்பூரில் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் கனவுகளுடன் பள்ளிக்குச் சென்ற மாணவி, தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி உயிரிழப்பின் அலட்சியத்திற்கு யார் காரணம்?...விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

பல்வேறு கனவுகளோடு பள்ளியில் கொண்டு சென்று விடுவதற்காக அழைத்துச் சென்ற மகள், தன் கண்முன்னே தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பதை, பெற்ற தாய் பார்ப்பது வேதனையிலும் மிகுந்த வேதனை. அப்படி அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தான் சென்னை பெரம்பூரில் நிகழ்ந்தது.

Advertisement

சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் யாமினி, 5 ஆம் வகுப்பு மாணவியான தனது மகள் சவுமியாவை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது தண்ணீர் லாரியில் விழுந்து மாணவி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண்முன்னே மகள் உயிரிழந்ததைக் கண்டு கதறித் துடித்தார் யாமினி.  பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த பகுதியான பேப்பர் மில்ஸ் சாலை மிகவும் குறுகலானது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படக்கூடிய சாலை. அந்த சாலையில் 4-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளி நேரங்களில் போக்குவரத்து போலீசார் முறையாக போக்குவரத்தைக் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அந்த பகுதி மக்கள். மாணவி இறந்ததை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், மாணவியின் குடும்பத்தினரை நேரில் பார்த்துக் கூட ஆறுதல் சொல்ல முடியவில்லை எனவும், மாணவியின் வீட்டருகே வசிப்பவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement

இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண், போக்குவரத்து காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தலையும் பிறப்பித்துள்ளார்.  பள்ளிகள் உள்ள பகுதிகளில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களைக் குறைந்தது 100 நாட்களுக்குத்  திருப்பி அளிக்கக் கூடாது என்றும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகே போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் பீக் ஹவர்ஸ் என்று கூறப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில், சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பணியைச் சரியாகச் செய்யாததால் புளியந்தோப்பு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்பியம் போக்குவரத்து ஆய்வாளர் சுடலைமணியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்திற்குத் தண்ணீர் லாரி ஒரு காரணம் என்று கூறினாலும், மற்றொரு காரணம் விபத்து நிகழ்ந்த சாலையில் இருந்த பள்ளங்கள் தான் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். அஜாக்கிரதையால் நிகழும் விபத்துக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல், விபத்து நடக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement