For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

06:45 PM Jun 30, 2025 IST | Murugesan M
தனித்தீவாக மாறிய அவலம்   அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்

குடிநீரில் தொடங்கி சாலை வரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கொடைக்கானலுக்கு அருகே அமைந்திருக்கும் வில்பட்டி ஊராட்சி 10க்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஊராட்சியாகச் செயல்பட்டு வருகிறது.

Advertisement

பள்ளங்கி, குறிஞ்சி நகர், பெரும்பள்ளம், சின்னப்பள்ளம் என இயற்கை எழில் மிகுந்த சூழல் கொண்ட கிராமங்களை உள்ளடக்கிய வில்பட்டி ஊராட்சியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. அத்தகைய சிறப்புமிக்க வில்பட்டி ஊராட்சிக்கு செல்லும் சாலையோ, பயணிக்கவே முடியாத அளவிற்குக் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கின்றன

கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக போடப்பட்ட சாலை ஒரு மாதம் கூட தாங்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பள்ளிக் குழந்தைகள் தொடங்கி விவசாயம் செய்யப்படும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வானங்கள் வரை நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது விபத்து ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

Advertisement

வில்பட்டி ஊராட்சியின் அவலநிலைக்குச் சாலை வசதியின்மை ஒரு காரணம் என்றால் குப்பைத் தொட்டிகள் மற்றொரு காரணமாக அமைந்திருக்கின்றன. குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தினால் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைகள் அனைத்தும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ளன. நீண்டநாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளிலிருந்து  துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குண்டும் குழியுமான சாலைகள், மலைபோல குவிந்திருக்கும் குப்பைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை என எந்தவித வசதிகளுமின்றி வில்பட்டி ஊராட்சி தனித்தீவு போல காட்சியளிக்கிறது. வில்பட்டி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கு தேவைப்படக்கூடிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்  ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement