தமிழகத்தை அதிர வைத்த கொலை!
நெல்லையில் ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கோரி மனு அளித்த நிலையில் நடந்த இந்த கொலைக்கு காவல்துறையினரே பொறுப்பு என உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
”எனக்கு கொலை மிரட்டல்... ஒருத்தர், ரெண்டு பேரு இல்ல. 20, 30-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் என்னை கொன்னுடுவாங்க....” இதெல்லாம் தமிழ்நாடு முதலைச்சரிடம் உயிர்பாதுகாப்பு கேட்டு ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ. அவர் திருநெல்வேலி டவுன் தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி. அறுபது வயதான அவர், காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி, விருப்ப ஒய்வு பெற்றவர்.
நிச்சயம் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பி இருந்தவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியே பரிசாக கிடைத்துள்ளது. டவுன் ஜாமியா தைக்கா தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து மோட்டார் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜாகீர் உசேனை, வழி மறித்த கும்பல், சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. இந்த கொலைக்கு காரணம் காவல்துறையின் மெத்தனம் மட்டுமல்ல, காவல் துறையினரே உடந்தையாகவும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்பியுள்ளனர்.
கொலையான ஜாகீர் உசேன் வெளியிட்ட வீடியோவில், கொலை மிரட்டலுக்கு முக்கிய காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர்தான். தவுபிக் கொடுத்த பொய்யான புகாரில் தம் மீதும், தமது மனைவி மீதும் பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஜாகிர் உசேன் கொலைக்கு காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். வக்பு வாரியத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இடம் தொடர்பான முன்விரோதத்தில்தான் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட 2 மாதத்தில் நெல்லையில் ஜாகீர் உசேன் கொல்லப்பட்டுள்ளார்.
கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிராக போராடிய ஜெகபர் அலி, லாரியை மோதி கொலை செய்தனர். எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளை மட்டும் நின்றபாடில்லை. இதைத் தட்டிக் கேட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று அச்சப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த தமிழரசன் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் (17ம் தேதி நம்மிடம் விஷூவல்ஸ், பைட் உள்ளது கொடுத்த புகாரே சாட்சியாக உள்ளது.
பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுக்காமல், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு நெல்லையில் ஜாகீர் உசேன் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்கிறார்கள் தன்னார்வலர்கள். மக்கள் நலன் சார்ந்து குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள், கொல்லப்படுவது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக விரோதிகளை இனியாவது இரும்புக் கரம் கொண்டு அடக்குவாரா முதலமைச்சர்...? என்கிற கேள்வி எழுந்துள்ளது.