For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு : முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி!

07:15 PM Apr 07, 2025 IST | Murugesan M
தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு    முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி

90 வயது நிரம்பிய நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் வரதராஜுலு - ஆதிலட்சுமி கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு அடையாளமாகத் திகழ்கின்றனர். சேலம் லீ பஜாரில் கடை நடத்திவரும் தம்பதி குறித்தும் அவர் கடையில் விற்பனை செய்யப்படும் பஜ்ஜி, போண்டா குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் லீ பஜார் பகுதியைச் சேர்ந்த 90 வயது நிரம்பிய தம்பதியர் தான் இந்த வரதராஜுலுவும் ஆதிலட்சுமியும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே லீ பஜார் பகுதியில் வடை, பஜ்ஜி, போண்டா கடையைத் தொடங்கிய போது இருந்த ஆர்வமும் உழைப்பும் தற்போது தொடர்கிறது.

Advertisement

சேலம் மாவட்டத்தில் வர்த்தக மையமான லீ பஜார், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தான் இந்த தம்பதி வைத்திருக்கும் கடையின் பிரதான வாடிக்கையாளர்கள்.

தரமான மாவு மற்றும் எண்ணெய்யின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் இந்த வடை, போண்டாவுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த போதிலும், அதன் தரத்தையோ, அளவையோ சிறிதளவும் குறைக்காததே பொதுமக்கள் இந்த தம்பதியினரின் கடையைத் தேடி வந்து வாங்கிச் செல்லும் சூழலையும் உருவாக்கியது. 25 பைசாவில் தொடங்கிய வடை, போண்டா, பஜ்ஜி தற்போது ஒரு ரூபாயாக உயர்ந்திருந்தாலும் அதற்கான வரவேற்பு தற்போது வரை குறையவில்லை.

Advertisement

வரதராஜுலு - ஆதிலட்சுமி தம்பதியினரின் இரு மகன்களும் அவரவர் புதிய தொழிலைத் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் மகன்களை நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக 90 வயது கடந்த நிலையிலும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்முகத்துடன் வரவேற்பதையும், தன்மையுடன் பேசுவதையுமே அடையாளமாகக் கொண்டிருக்கும் இந்த தம்பதியினரால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 90 வயது நிரம்பிய நிலையிலும் சுயமாக உழைத்து வாழும் இந்த வரதராஜுலு - ஆதிலட்சுமி தம்பதியினர் தன்னம்பிக்கை உணர்வுக்கும் விடா முயற்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement