For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

09:18 AM Oct 31, 2025 IST | Murugesan M
தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம்   லாட்டரியில் ரூ 240 கோடி வென்ற இந்தியர்

அபுதாபியில் வசித்து வரும் 29 வயது இந்தியரான அனில்குமார் போலா, ஐக்கிய அரபு அமீரக லாட்டரி வரலாற்றில் முதல் முறையாக 100 மில்லியன் திர்ஹாம், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 240 கோடி ரூபாய்க்கான ஜாக்பாட்டை வென்று, தனது வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியுள்ளார். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பிரபலமான லாட்டரி திட்டங்களுள் ஒன்று "லக்கி டே டிரா". இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்கள் மூலம் தங்கள் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி அவர்களின் அதிஷ்டத்தை சோதிக்க முடியும்.

Advertisement

இந்தப் போட்டியின் ஒவ்வொரு டிராவிலும் பெரும் தொகைகள் பரிசாக வழங்கப்படுகின்றன. சில கோடிகளில் தொடங்கும் அந்தப் பரிசுத் தொகைகள் 100 மில்லியன் திர்ஹாம் ஜாக்பாட், அதாவது இந்திய மதிப்பில் 240 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகின்றன.

இந்த லாட்டரி திட்டம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த லாட்டரி திட்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் 100 மில்லியன் திர்ஹாம் ஜாக்பாட்டை வென்று அசத்தியுள்ளார்.

Advertisement

அபுதாபியில் வசித்து வரும் 29 வயது இளைஞரான அனில்குமார் போலா என்பவர் மீதே இந்த அதிஷ்டக் காற்று வீசியிருக்கிறது. கடந்த அக்டோபர் 18-ம் தேதி நடந்த 23-வது "லக்கி டே டிரா"-வில் பங்கேற்ற அனில்குமார் போலா அதில் வென்று 240 கோடி ரூபாய் என்ற பெருந்தொகையை அள்ளிச் சென்றுள்ளார்.

அவரது இந்த மகத்தான வெற்றியின் வீடியோவை, எக்ஸ் தளத்தில் 'எதிர்பார்ப்பு முதல் கொண்டாட்டம் வரை' என்ற தலைப்பில் UAE லாட்டரி நிறுவனம் பகிர்ந்துள்ளது. பொன்னிற துகள்கள் மழையாகப் பொழிய அதில் நனைந்தபடியே அனில்குமார், 100 மில்லியன் திர்ஹாமுக்கான பெரிய செக்கை பெற்றுக்கொள்ளும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் தனது வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்துகொண்ட அனில்குமார், தான் வெற்றிபெற எந்த மாயமும் செய்யவில்லை என கூறினார். லாட்டரியின் கடைசி எண் தனது தாயின் பிறந்தநாள் வருவதுபோல் தேர்வு செய்த நிலையில், அது தனக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்துள்ளதாகப் புன்சிரிப்புடன் தெரிவித்தார்.

தொடர்ந்து தனது வெற்றியை அறிந்த தருணத்தைத்தையும் அவர் உணர்ச்சிப்பெருக்குடன் நினைவுகூர்ந்தார். மேலும், பெருந்தொகையை வென்றபோது இருந்த தனது மனநிலை குறித்து விவரித்த அனில்குமார், இந்தத் தொகையை எப்படி சரியாக முதலீடு செய்வது, எப்படி செலவிடுவது என ஆழமாகச் சிந்தித்ததாகக் கூறினார். தன்னிடம் உள்ள பணத்தை சரியான பாதையில் செலவிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

வென்ற பணத்தின் மூலம் சூப்பர் கார் ஒன்றை வாங்கி, தனது குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் கொண்டாட எண்ணியுள்ளதாகத் தெரிவித்த அனில்குமார், குடும்பத்தினரை UAE-க்கு அழைத்து வந்து அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அத்துடன், தான் வென்ற தொகையில் ஒரு பங்கைத் தானமாக வழங்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறிய அனில்குமார், அனைவரும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால் ஒருநாள் அவர்களின் வாழ்விலும் அதிஷ்டம் மலரும் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். தனது வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியமைத்த UAE லாட்டரி நிறுவனத்திற்கும் அனில்குமார் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

Advertisement
Tags :
Advertisement