For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

07:05 PM May 17, 2025 IST | Murugesan M
திடீர் தயாரிப்பாளர் பின்னணி   ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

ஒரே நேரத்தில் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து படங்களைத் தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திடீர் தயாரிப்பாளான ஆகாஷ் பாஸ்கரன் குறித்தும் அவரின் பின்னணி குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படக்குடிய நபர் ஆகாஷ் பாஸ்கரன். ஒரே நேரத்தில் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய உச்ச நடிகர்களின் திரைப்படங்களைத் தயாரிக்கும் அளவிற்கான செல்வாக்கு தான் அதற்குக் காரணம். அதோடு நடிகர் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தை ஆகாஸ் பாஸ்கரன் தயாரிப்பதோடு அவரே இயக்கவும் செய்கிறார்.

Advertisement

தனுஷ் தயாரிப்பில் எடுக்கப்பட்ட நானும் ரவுடி தான் எனும் திரைப்படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமான ஆகாஷ் பாஸ்கரன், குறுகிய கால இடைவெளியில் தனுசை வைத்தே படம் தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பது திரையுலக வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

கவின்கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகள் தாரணிக்கும், ஆகாஷ் பாஸ்கரனுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்றதோடு, தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக கருதக்கூடிய முன்னணி நடிகர்களும் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மீண்டும் தொடர்ந்திருக்கும் நிலையில், அதில் ஆகாஷ் பாஸ்கரன் வீடும் இணைந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisement

திடீர் திரைப்பட தயாரிப்பாளான ஆகாஷ் பாஸ்கரனுக்கும் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கும் இடையே இருக்கும் நெருக்கமும் இந்த சோதனைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அமைச்சரான பின்பு எந்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல உதயநிதி காட்டிக் கொண்டாரோ அதே ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும், தயாரிக்கும் படங்களை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலுக்கு வந்த பின்பும் திரைத்துறையை தன் கட்டுப்பாட்டுக்குள்ளாகவே வைத்திருக்க விரும்பும் உதயநிதி ஸ்டாலின், அதற்கான பணியை ஆகாஷ் பாஸ்கரனை வைத்துச் செய்வதாகவும், அவ்வாறு தயாரிக்கப்படும் படங்களைக் கூட ரெட் ஜெயண்ட் மட்டுமே வெளியிட வேண்டும் எனவும் உறுதியாக இருப்பதாகவும் திரையுலக வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு ஒரே நேரத்தில் நான்கு படங்களை இயக்கி தயாரிக்கும் அளவிற்குப் பொருளாதாரம் எங்கிருந்து வந்தது ? உதயநிதி மற்றும் அன்பில் மகேசுக்கும் ஆகாஸ் பாஸ்கரனுக்கும் இருக்கும் தொடர்புகள் என்னென்ன ? மூவருக்கும் இடையே பணம் கைமாறப்பட்டுள்ளதா? உள்ளிட்ட அடுக்கடுக்கான விசாரணைகள் தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. விசாரணையில் கிடைக்கும் ஆவணங்களைப் பொறுத்து அடுத்தகட்ட விசாரணையை விரிவுபடுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement