திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் இருக்கும் ஸ்ரீ பூரிமரத்த முனீஸ்வரர் திருக்கோயில் அருகே குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் பொதுமக்களும் பக்தர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோயிலின் நான்கு திசைகளிலும் குப்பைகள் குவிந்திருக்கும் நிலையில், கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்திருக்கும் 500 வருட பழமைமிக்க கோவிலான ஸ்ரீபூரிமரத்த முனீஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும் பவுர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட விஷேசமான நாட்களில் முனீஸ்வரரை தரிசிக்க ஆயிரக்கணக்கோர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இத்தகையை பழமைமிகுந்த கோயிலில் நான்கு திசைகளிலும் குப்பைகள் மலைபோல குவிந்திருப்பது பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுப்பாக்கம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த குப்பைகளைக் கொட்டக் கூடிய இடமாகத் திருக்கோயில் மாறியிருக்கிறது. முனீஸ்வரரை வழிபட வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றம் இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பக்தர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கோயிலைச் சுற்றி நிறைந்திருக்கும் குப்பைகள் குறித்து கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போது குப்பை என்றால் துர்நாற்றம் வரத்தான் செய்யும் எனப் பதில் வழங்கியது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய கோயில் நிர்வாகமே இப்பிரச்சனையைக் கண்டுகொள்ளவில்லை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரும்பி வழிபடும் திருக்கோயிலை முறையாகப் பராமரிக்கத் தவறிய கோயில் நிர்வாகத்தின் மீது, பலமுறை புகார் அளித்தும் அலட்சியமாக நடந்து கொள்ளும் ஊராட்சி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இவ்விவகாரத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு குப்பைகளை அகற்றி பக்தர்கள் மன நிம்மதியோடு கோயிலுக்கு வந்து செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் அடையாளங்கள் மற்றும் அங்கீகாரங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் பழமையான கோவில்களைப் பராமரிக்க வேண்டிய அரசாங்கம் பராமரிக்கத் தவறிவிட்டதோ என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் கடவுளுக்கே இந்த நிலை என்றால் தங்களின் நிலையைச் சற்று எண்ணித்தான் பார்க்க வேண்டும் எனப் பொதுமக்கள் முனுமுனுக்க தொடங்கியுள்ளனர்.