For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த "மெலிசா" : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

09:42 AM Oct 31, 2025 IST | Murugesan M
தீவிர சூறாவளியாக  சுழன்றடித்த  மெலிசா     வலுவடைய காரணமாக இருந்த காரணிகள்  என்னென்ன

அட்லாண்டிக் பெருங்கடலில் சாதாரணமாக உருவான மெலிசா புயல், திடீரென 5-ம் பிரிவு சூறாவளியாக வலுபெற்றது விஞ்ஞானிகளையும், வானிலை ஆய்வாளர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு எச்சரிக்கை மணி என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரீபியன் கடற்பரப்பில் உருவான மெலிசா சூறாவளி அட்லாண்டிக் பெருங்கடலில் இதுவரை காணப்பட்ட சக்திவாய்ந்த சூறாவளிகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட கோடைகாலத்தால் கடலின் வெப்பநிலை உச்சத்தை எட்டியிருந்த நிலையில், அதீத கொதிநிலையில் இருந்த கடல் நீர் சூறாவளியின் தீவிரத்தை அதிகரிக்க வழிவகுத்தது.

Advertisement

இதன் காரணமாகவே முதலில் சாதாரண புயலாக உருவான மெலிசா வேகமாக வலுவடைந்து மாபெரும் சூறாவளியாக உருவெடுத்தது. அதன் கோரதாண்டவம் ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் நாடுகளை பந்தாடிய காட்சிகளை, உலக மக்கள் அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது. கடற்பகுதியில் உருவாகும் ஒவ்வொரு புயலும், நிலப்பரப்பை அடையும்போது வலுவிழப்பது இயல்பு.

ஆனால் அதற்கு விதிவிலக்காக விளங்கிய மெலிசா சூறாவளி, ஜமைக்காவில் கரையை கடந்தபோது அந்நாட்டை தடம் தெரியாமல் சிதறடித்தது. 4-ம் பிரிவை தாண்டி 5-ம் பிரிவு சூறாவளியாக வலுவடைந்த மெலிசா தனித்துவமானதாகக் கருதப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து அதீத வெப்பத்துடன் மேலே எழுந்த நீராவி, புயலின் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த 'இயந்திரம்' போல் செயல்பட்டு, அதன் சுழற்சி வலுவடைய வழிவகுத்தது.

Advertisement

அதே நேரத்தில், மேல்நில வளிமண்டலத்தில் காணப்பட்ட குளிர்ந்த காற்று அதற்குக் கூடுதல் ஆற்றலை வழங்கியது. மற்றொருபுறம், வழக்கமாகப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் 'TROPHOPAUSE' எனும் வளிமண்டலத்தின் மேல் மற்றும் கீழ் சுருக்கங்களுக்கு இடையிலான பகுதி, தற்போது அட்லாண்டிக் பெருங்கடலிலும் அதே அளவில் உயர்ந்துள்ளது. இது மெலிசா சூறாவளியின் மேகங்கள் உயரமாகவும், குளிச்சியாகவும் உருவாகி, அதன் உள்வட்டத்தில் மிகச் சக்திவாய்ந்த சுழற்சியை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது.

இந்த அனைத்து காரணிகளும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதால், மெலிசா மிகக் குறைந்த நேரத்தில் சக்திவாய்ந்த சூறாவளியாக வலுபெற முடிந்ததாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெறும் 24 மணி நேரத்தில் மெலிசா சூறாவளியுடைய காற்றின் வேகம் மணிக்கு 70 மைல் வரை அதிகரித்தது. 'RAPID INTENSIFICATION' என்று அழைக்கப்படும் இது போன்ற நிகழ்வு, மக்களுக்கும், அரசு நிர்வாகங்களுக்கும் தயாராகும் நேரத்தை வேகமாகக் குறைக்கும் என்பதால், மிகவும் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மனிதனால் உண்டான காலநிலை மாற்றமும் மெலிசா சூறாவளியுடைய காற்றின் வேகத்தைச் சுமார் 10 மைல் வரை அதிகரித்திருக்கலாம் எனக்கூறும் விஞ்ஞானிகள், இதனால் அதன் அழிவுத்திறன் 50 சதவீதம் வரை உயர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

வெப்பம் நிறைந்த கடல் நீரும், அதிக ஈரப்பதமுள்ள காற்றும், புயல்களுக்கு அதீத மழைப்பொழிவு மற்றும் காற்றழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான கூடுதல் ஆற்றலை வழங்கும் என்பதற்கு மிகச்சிறந்த சான்றாக மெலிசா விளங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் உலகத்தையே உற்று நோக்க வைத்த மெலிசா சூறாவளி இயற்கையின் வலிமையை மட்டுமல்லாமல், காலநிலை மாற்றம் எத்தனை எளிதாக நம்மைச் சுற்றியுள்ள சூழலை மாற்றுகிறது என்பதற்கு ஒரு எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது.

Advertisement
Tags :
Advertisement