தூக்கத்தை தொலைத்த இந்தியர்கள் : 6 மணி நேரம் மட்டுமே துாக்கம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
59 சதவீத இந்தியர்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், பலருக்கு, ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம்? எந்த அளவுக்கு ஆழ்ந்த உறக்கம் கொள்கிறோம் ? என்பது மிக முக்கியமானதாகும். குறிப்பாக, உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் சரியான தூக்கம் மிக அவசியமாகும்.
சமீபத்தில் Local Circles நடத்திய கருத்துக்கணிப்பில், கிட்டத்தட்ட 59 சதவீத இந்தியர்கள் ஒவ்வொரு இரவும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
வழக்கமாகவே , நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் போன்களை பயன்படுத்துவது போன்றவை தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதற்கு நேர் மாறாக, இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் ஆறு சதவீத பேர் மட்டுமே தங்கள் தூக்கத்தை மொபைல் போன் கெடுக்கிறது என்று கூறியுள்ளனர்.
348 மாவட்டங்களைச் சேர்ந்த 61 சதவீத ஆண்கள் மற்றும் 39 சதவீத பெண்கள் உட்பட 43,000 க்கும் மேற்பட்டவர்களிடம்,தேசிய அளவில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதாக 39 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை தூங்குவதாக 39 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 20 சதவீதம் பேர் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்துள்ளனர். வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே எட்டு முதல் பத்து மணி நேரம் தூங்குவதாக பதிலளித்துள்ளனர். மீதமுள்ள 59 சதவீதம் பேர் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என இந்த கருத்து கணிப்பில் கண்டறியபட்டுள்ளது.
நலமுடைய பெரியவர்கள் ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என்று இந்திய தேசிய மருத்துவ இதழில் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
உணவு மற்றும் உடற்பயிற்சியைப் போலவே தூக்கமும் உடல்நலத்துக்கு மிகவும் இன்றியமையாதது என்றும், மில்லியன் கணக்கானவர்கள் நிம்மதியான தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார்கள் என்று உலக அளவில் இதேபோன்ற ஆய்வை நடத்திய ResMed -ன் தலைமை மருத்துவ அதிகாரி (Dr Carlos M Nunez )டாக்டர் கார்லோஸ் எம் நுனெஸ் தெரிவித்துள்ளார்.
படுக்கைக்கு செல்லும் முன் மொபைல் போனை ஆப் செய்துவிடுவதால் மட்டும் நல்ல தூக்கம் வருவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள இந்த கருத்து கணிப்பு, இரவு நேர இடையூறுகளே இந்தியர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தடை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
தூக்கம் வராமல் தவிப்பதாக கூறிய 14,952 பேர்களில் 72 சதவீதம் பேர், கழிவறையைப் பயன்படுத்த எழுந்திருப்பதே தூக்கம் தடைபட காரணம் என்று கூறியுள்ளனர். மோசமான தூக்க அட்டவணை காரணம் என்று 25 சதவீதம் பேரும், வெளிப்புற சத்தங்கள் மற்றும் கொசுக்கள் காரணமாக தூக்கம் கெடுகிறது என்று 22 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
9 சதவீதம் பேர் ஸ்லீப் அப்னியா போன்ற மருத்துவ பிரச்னையால் தூக்கம் வரவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் 9 சதவீதம் பேர் குழந்தைகளே தூக்க இடையூறுகளை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.
மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, 6 சதவீதம் பேர் மட்டுமே மொபைல் அழைப்புகள் தூக்கம் தடைபடுவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
வேலை பார்க்கும் இந்தியர்களில் 47 சதவீதம் பேர் தூக்கமின்மை காரணமாக ஒரு முறையாவது மருத்துவ விடுப்பு எடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். கூடுதலாக, இரவுப் பணிகளில் இருப்பதால், இயற்கையான தூக்க சுழற்சியை பாதிக்கப்படுவதாக 37 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
சராசரியாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களே அதிகம் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக இந்த கருத்து கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யவேண்டி இருப்பதால், இரவில் தாமதமாக தூங்க செல்வதாலும்,அதிகாலையிலேயே எழுவதாலும் தூக்கப் பிரச்னை ஏற்படுவதாக கூறியுள்ளனர்.
பெரும்பாலும் தூக்க முறைகளைப் பாதிக்கும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும், பெண்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
வாரத்தில் பல நாட்கள் நீண்ட நேரம் தூங்க முடியாத நிலையில், விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவதாகவும்,சிலர் பகலில் தூங்குவதாகவும், தெரிவித்துள்ளனர்.
போதுமான தூக்கம் இல்லாதது, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மேலும், சீரான தினசரி வழக்கத்தை கடைபிடிப்பதும், தூங்கச் செல்லும் முன் டிவி, கணினி மற்றும் தொலைபேசிகளைத் தவிர்ப்பதும், தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.