தெய்வசெயலின் குற்றச்செயல் - கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?
திருமண ஆசைகாட்டி திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தன்னை இறையாக்க முயற்சித்ததாக அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது இளம்பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைத் திருமணம் செய்து தவறான செயலுக்குப் பயன்படுத்தும் தெய்வச்செயல் குறித்தும் அவரால பாதிக்கப்பட்ட பெண் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியை, ஏற்கனவே திருமணமானதை மறைத்து திமுகவின் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் காதலிப்பதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி சோளிங்கர் கரிக்கல் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணமான சில மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா ஆகியோரிடம் இப்பெண்ணை அறிமுகம் செய்து கல்லூரி படிப்பை முடித்தவுடன் நீங்கள் தான் வேலை வாங்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் இரவு நேரத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தி, திமுக நிர்வாகிகளின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என வற்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
ஒருகட்டத்தின் தெய்வச்செயலின் தொல்லையைத் தாங்க முடியாத இளம்பெண் அரக்கோணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் தெய்வச்செயலோ நான் திமுகவில் பொறுப்பில் உள்ளவன் என்றும் வழக்கறிஞர் என்றும் தெனாவட்டாக கூறியதோடு தன் மீதான புகாரை யாரும் ஏற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். அவர் சொன்னதைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரும் ஏற்கப்படவில்லை.
தன்னை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கனவே திருமணமானவர் என்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. அதுவும் அரசியல் பின்புலமோ, பண பின்புலமோ இல்லாத பெண்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்வதையே தெய்வச்செயல் வாடிக்கையாகவே வைத்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறை தொடங்கி அனைவரிடமும் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்ன பின்பும் யாரும் உதவிக்கு வராத நிலையில் வேறு வழியின்றி சென்னைக்கு வந்து டிஜிபியை சந்தித்துப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.
திமுகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என முக்கிய தலைவர்களுடன் தெய்வச்செயல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், ஆளுங்கட்சி நிர்வாகியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.