For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

07:45 PM Nov 03, 2025 IST | Murugesan M
தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய  கோர விபத்து

தெலங்கானாவில் அரசு பேருந்தும், ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 20 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள விகாராபாத் பேருந்து பணிமனையில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தில், சுமார் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். பேருந்து ரங்கா ரெட்டி மாவட்டம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் எதிர்பாராதவிதமாக ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கியது.

Advertisement

மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கி, முதல் 6 வரிசைகளில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரும் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், லாரியில் இருந்த ஜல்லி கற்கள் முழுவதும் பேருந்தினுள் சரிந்து விழுந்ததால் அதிலிருந்த பயணிகளின் நிலைமை மேலும் கவலைக்கிடமானது. ஒரு சிலர் ஜல்லி கற்களுக்குள் புதையுண்டு வலியாலும், வேதனையாலும் உதவிகோரி துடித்த காட்சி காண்போரைக் கண்கலங்க செய்தது.

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசாரும், மருத்துவ குழுவினரும் 3 ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன், பேருந்தை இரண்டு துண்டாக வெட்டி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கிரேவல் கற்களுக்குள் புதையுண்டவர்களை வெளியே எடுப்பதில் பல சிக்கல்கள் நிலவியதால், மீட்பு பணிகள் பலமணி நேரம் நீடித்தது. இதனால் ஹைதராபாத் - பீஜாப்பூர்  சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் சிக்கி 10 பெண்கள், 10 மாத குழந்தை உட்பட 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்பர் லாரி அதிவேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரித்துள்ள அதிகாரிகள், விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய சிலர் செவெல்லா அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஹைதராபாத் ஓஸ்மானியா மற்றும் காந்தி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சையும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விபத்து சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தெலங்கானா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் கோர விபத்து, சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அதிகரித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement