For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

08:15 PM Jun 20, 2025 IST | Murugesan M
தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி   ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி

சென்னை வடபழனி 100 அடி பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் ஆபத்தான முறையில்  பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை வடபழனி 100 அடி பிரதான சாலையானது தினந்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் செல்லக்கூடிய முக்கிய பிரதான சாலையாகத் திகழ்கிறது. இங்குதான் மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Advertisement

அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை செல்லக்கூடிய சாலையாக வடபழனி 100 அடி பிரதான  சாலை திகழ்கிறது. இந்நிலையில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டன. அதில் வடபழனியில் இருந்து அரும்பாக்கம் செல்லக்கூடிய 100 அடி பிரதான சாலையில் 1.7 கிலோமீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்க 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுக் கடந்த  2023ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் வடபழனி 100 அடி சாலை முதல் அரும்பாக்கம் வரை மழை நீர் வடிகால் பணிகள் அமைப்பதற்காகப் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.  ஆனால் சுமார் 250 மீட்டர் தூரம் வரை  பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியிலேயே விடப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால் பகுதி அமைக்கப்படும் இடத்தில்  குடிநீர் குழாய் செல்வதால்  பணிகளை மேற்கொள்ள  முடியவில்லை எனக் கூறி  கடந்த ஜனவரி மாதம் பணிகளை நிறுத்தி உள்ளனர். மேலும் குடிநீர் வாரியம் சார்பில் குழாய்களை மாற்றி அமைத்த பின்பே மழை நீர் வடிகால் பணிகளைத் தொடர முடியும் என நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குடிநீர் குழாய்களை  மாற்றி அமைக்காததால் மழைநீர் வடிகால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மழைநீர் வடிகால் பணிகளுக்காகப் பள்ளங்கள் தோண்டும் பொழுது சிக்னல்களின் மின்சார கேபிள்கள் அறுந்து சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் சிக்னல் என்பது முறையாக வேலை செய்யாமல் இருக்கின்றன. இதன் காரணமாகவும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல கடைகளுக்கு முன்பு மழை நீர் வடிகால் பணிகளுக்காகப் பள்ளங்கள் தோண்டப்பட்டதால் வியாபாரம் குறைந்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை வடபழனி 100 அடி பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அரங்கேறுகின்றன.  இதனால் அச்சத்தில் உள்ள மக்கள் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement
Tags :
Advertisement