For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் - அச்சத்தில் மக்கள்!

06:05 AM Jun 16, 2025 IST | Murugesan M
நகரமா  நரகமா     உயிர்பலி வாங்கும் பள்ளங்கள்   அச்சத்தில் மக்கள்

சாலைப்பணி, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் பதிக்கும் பணி என வருடத்தின் 365 நாட்களிலும் நடைபெறும் பணிகளால் கோடம்பாக்கம் மற்றும் சூளைமேடு பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாதாரண மழைக்கே தேங்கியிருக்கும் மழைநீரும், குண்டும் குழியுமான சாலைகளும் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் இந்த சாலை அமைந்திருக்கும் பகுதி சென்னையின் மையப்பகுதிகளில் ஒன்றான சூளைமேடு பகுதி தான். சூளைமேடு மட்டுமல்ல, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம், பெரியார் பாதை என அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. மழைநீர் வடிகால் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி என மாதம் ஒரு குழி தோண்டப்படுவதும், பணிகள் முடிந்தும் அக்குழிகள் மூடப்படாமல் இருப்பதுமே அடிக்கடி விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

Advertisement

ஒவ்வொரு மழையின் போது சாலைகளிலும், வீடுகளுக்கு முன்பாகவும் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறுகிய சாலைகளில் இருபுறமும் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்களை உடனுக்குடன் மூட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போதுவரை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்கு ஒரு பள்ளத்தை மூடினால் அதற்குள் அடுத்த பள்ளத்தைத் தோண்டி விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

வடபழனி முதல் கோடம்பாக்கம் வரை நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் சாலையாகப் பெரியார் பாதை சாலை மாறியிருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பல மணி நேரத்திற்கு நீடிக்கிறது. குடிநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதும் அவசியமானது என்பதை உணர்ந்து இனியாவது முறையான மாற்று ஏற்பாடுகளோடு சென்னை மாநகராட்சி பணியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement