For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பறக்கும் துப்பாக்கி - அசத்தும் இந்தியா!

07:28 PM Jun 30, 2025 IST | Murugesan M
பறக்கும்  துப்பாக்கி   அசத்தும் இந்தியா

இந்திய பாதுகாப்புத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ட்ரோனுடன் பறக்கும் துப்பாக்கி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தத் துப்பாக்கிகள் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பணமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாரச் சப்ளை அண்ட் சர்வீசஸ் நிறுவனம் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து பல்வேறு ராணுவ தளவாடங்களைத் தயாரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் ஏகே 203 வகைத் துப்பாக்கி பொருத்தப்பட்ட ட்ரோனை வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளது. அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் துப்பாக்கி இந்திய ராணுவத்தின் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

வேகம், துல்லியம் மற்றும் தாக்குதல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் துப்பாக்கி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே இந்தத் துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 ஆயிரம் அடி உயர்த்தில் செயற்கை நுண்ணறிவுத் திறனோடு தானாக இயங்கும் ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் அடுத்தகட்டமாகத் துப்பாக்கியுடன் இயங்கும் ட்ரோன்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

மிகவும் சவாலான பகுதிகளில் ராணுவ வீரர்களை நிலைநிறுத்துவது கடினம் என்பதால் இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு பணியை மேம்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த ட்ரோன் துப்பாக்கியின் சோதனை முயற்சி வெற்றியடைந்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, பாதுகாப்புத்துறையின் திறனையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும் துப்பாக்கி 8 கிலோ கிராம் எடைக் கொண்டதாகும். நிமிடத்திற்கு 850 முதல் 1050 சுற்றுகள் வரைச் சுடும் திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் ட்ரோன் துப்பாக்கி காற்று, வெப்பநிலை மற்றும் தூரத்தின் அடிப்படையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வசதி படைத்ததாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் வரைத் தானாக இயங்கும் தொழில்நுட்ப வசதிகளோடு, வாகனங்கள், கடற்படைக் கப்பல்களில் இருந்தபடியே இதனைச் செயல்படுத்திடவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் படிப்படியாகத் தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகப் பாதுகாப்புத்துறையில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான திட்டங்களுக்கு ஆண்டுதோறும் நூறு கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.

இந்தியப் பாதுகாப்பு படைகளை முழுவதும் நவீனமயமாக்கும் முயற்சிக்குத் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் துப்பாகி பெரும் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது.

Advertisement
Tags :
Advertisement