பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!
வயது முதிர்வு, அரசியல் பணிகளில் தொய்வைக் காரணம் காட்டி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை அப்பதவியில் இருந்து நீக்கி ஓரங்கட்ட திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. திமுகவால் வாழ்ந்து திமுகவாலே வீழ்ந்திருக்கும் துரைமுருகன் குறித்தும் திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
கருணாநிதியோடு இருந்தேன்.... ஸ்டாலினோடும், உதயநிதியோடும் இருக்கிறேன். நாளை இன்ப நிதியோடும் இருப்பேன் என வெளிப்படையாக வாக்குமூலம் அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பின்னணியில் இருக்கும் பல அரசியல் நகர்வுகளும் வெளிவரத்தொடங்கியுள்ளன.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராகவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தீவிர விசுவாசியாக அறியப்படுபவருமான துரைமுருகன் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துவருகிறார்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு தலைவர் பதவியை ஏற்ற மு.க.ஸ்டாலின், கட்சியின் சீனியர் என்ற அடிப்படையில் துரைமுருகனை பொதுச்செயலாளராக நியமித்தார். திமுகவின் பொதுச்செயலாளர் பதவி அதிகாரம் படைத்தது என்றாலும், துரைமுருகனுக்கான அதிகாரம் என்னவோ மிகக் குறுகிய அளவிலேயே இருந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது காட்பாடி தேர்தலில் போட்டியிட்ட துரைமுருகன், தனக்கு இது தான் கடைசி தேர்தல் எனப் பிரச்சாரம் செய்து சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார்.
முன்னதாக கால் நூற்றாண்டுக்கும் மேலாக துரைமுருகன் கைவசம் இருந்த பொதுப்பணித்துறை உடைக்கப்பட்டு நீர்வளத்துறை உருவாக்கப்பட்டு அத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டது. பெயரளவில் மட்டுமே பொதுச்செயலாளர் பதவியை வைத்திருந்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை எனும் சிறிய துறையை மட்டுமே ஒதுக்கியது அவரை ஓரங்கட்டும் முயற்சி எனவும் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும் கனிமவளம் எனும் பணம் கொழிக்கும் துறை துரைமுருகனின் வசமே இருந்தது.
கருணாநிதி காலத்தில் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினோ துரைமுருகனை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பது கட்சி நிர்வாகிகளுக்கு மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது.
அதனை உணரத் தொடங்கிய துரைமுருகன் படிப்படியாக அறிவாலயம் வருவதையும் குறைத்துக் கொண்டார். அதோடு முதலமைச்சரின் மகனும், துணை முதலமைச்சருமான உதயநிதிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் 10 சதவிகிதம் கூட தனக்குக் கிடைக்காததும் துரைமுருகனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தொடர்ந்து எழுந்த கனிமவளக்கொள்ளை புகார், மணல் கடத்தல், சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள் என துரைமுருகன் வசமிருந்த துறைகளின் கீழ் அடுக்கடுக்கான புகார்கள் எழத் தொடங்கின. இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர், துரைமுருகனின் இருந்த கனிமவளத்துறையை பறித்து ரகுபதிக்கு வழங்கியதோடு, ரகுபதியிடமிருந்த சட்டத்துறையை துரைமுருகனுக்கு வழங்கினார். இதன் பின்னணியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும் விமர்சனம் எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவில் உதயநிதி, கே என் நேரு, தங்கம் தென்னரசு எனப் பலருக்கும் இடம் கிடைத்த நிலையில் கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகனுக்கு இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையானது.
பொதுச்செயலாளர் என்ற பொறுப்புமிக்க பதவியை வழங்கிவிட்டு, துரைமுருகனை எந்தவித அதிகாரமும் இல்லாமல் வைத்திருப்பதாகவும் திமுக தலைமை மீது விமர்சனம் எழத்தொடங்கியது. துரைமுருகன் மீதான அடுக்கடுக்கான புகார்கள், மோசமடைந்து வரும் அவரின் உடல்நிலை ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு திமுகவிலிருந்து அவரை ஓரங்கட்டிவிட்டு புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்த பொறுப்பான பொருளாளர் பதவியில் இருக்கும் டி ஆர் பாலு பொதுச்செயலாளர் பொறுப்பை அடைய முயற்சி செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் டி ஆர் பாலு 80 வயதைக் கடந்து விட்டதாலும், ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டதாலும் அவருக்கு அப்பதவியை வழங்க திமுக தலைமை தயங்குகிறது.
அதே நேரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆ ராசாவுக்கு ஏற்கனவே துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அவரையே பொதுச்செயலாளராக அமர்த்தினால், அதன் மூலம் பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெற முடியும் எனவும் ஒரு தரப்பு திமுக தலைமைக்கு ஆலோசனை கூறியுள்ளது.
இவற்றைத் தவிர்த்து திமுகவின் முதன்மைச் செயலாளராகவும் ஸ்டாலினுக்கும், குடும்பத்திற்கும் நெருக்கமானவராக அறியப்படும் கே என் நேருவும் பொதுச்செயலாளர் பதவிக்கு அடிபோடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எங்கே கனிமொழியும் அப்பதவிக்காக வந்துவிடுவாரோ என முன்கூட்டியே கணித்து திமுகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அறிவாலயத்தில் ஒரு அறை ஏற்படுத்தப்பட்டு அவர் அமரவைக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
கருணாநிதி காலத்தில் படிப்படியாக வளர்ந்து வந்த துரைமுருகன், மு.க.ஸ்டாலின் காலத்தில் படிப்படியாக வீழத் தொடங்கி அரசியல் வாழ்க்கையே முடிவுக்குக் கொண்டுவரும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.