For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

08:15 PM Jun 24, 2025 IST | Murugesan M
பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்

வருடத்திற்கு நான்கு மாதங்களுக்கு மட்டுமே மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வரும் சுள்ளிக் கொம்பன் யானையை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். பழங்குடியின மக்களின் குடும்பத்தில் ஒருவனாக மாறியிருக்கும் சுள்ளிக் கொம்பன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையோடு இயற்கையின் பல்வேறு அதிசயங்களையும் உள்ளடக்கியது தான் இந்த ஆனைமலை புலிகள் காப்பகம். எப்போதும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் நிலவும் இப்பகுதி சுற்றுலாப்பயணிகள் விரும்பிக் கழிக்கும் சிறந்த பொழுது போக்கு தளமாகவும் விளங்குகிறது.

Advertisement

யானை, புலி, சிங்கவால்குரங்கு, வரையாறு, புள்ளிமான் போன்ற பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகவும் திகழும் ஆழியாறு பகுதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சுள்ளி கொம்பன் எனும் ஒற்றை யானை அவ்வப்போது வந்து செல்கிறது.

ஒவ்வொரு வருடமும் மார்கழி, தை, மாசி, பங்குனி என நான்கு மாதங்களில் பொழுதைக் கழிக்க வரும் சுற்றுப்பயணிகளைப் போலவே, கேரளப்பகுதியில் இருந்து இந்த சுள்ளி கொம்பன் யானையும் வந்துவிடுவதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் பலாப்பலங்கள் தான் சுள்ளி கொம்பனுக்குப் பிரதான உணவாகவும் அமைந்திருக்கிறது

Advertisement

பகல் நேரங்களில் நவமலை பகுதி, மாலை நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் வலம் வருவது எனப் பொள்ளாச்சி வனப்பகுதியை முழுவதுமாக சுற்றிவரும் இந்த சுள்ளிக் கொம்பனுக்குப் பொதுமக்கள் வைத்திருக்கும் பெயர் THE GIGANTIC PET OF WESTERN GATZ. அதே சமயம் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே பாதையில் பயணிக்கும் சுள்ளிக் கொம்பனைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

நான்கு மாத காலத்திற்குப் பிறகு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் மீண்டும் கேரளத்தின் நெல்லியம்பதி, கீரைப்பாடி ஆகிய பகுதிகளுக்கு தன்னுடைய பயணத்தைச் சுள்ளிக் கொம்பன் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத சுள்ளிக் கொம்பன் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குடும்பத்தில் ஒருவனாகவே மாறியிருக்கிறது.

Advertisement
Tags :
Advertisement