For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆக்கிரமிப்பு அகற்றம் : பாம்பு, தேள்களுடன் வாழ்க்கை - அகதிகளான மக்கள்!

09:05 AM Jun 12, 2025 IST | Murugesan M
ஆக்கிரமிப்பு அகற்றம்   பாம்பு  தேள்களுடன் வாழ்க்கை    அகதிகளான மக்கள்

ஆக்கிரமிப்பு எனக்கூறி அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத பெரும்பாக்கத்திற்கு வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்திருப்பதாகத் தமிழக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது. ரேசன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு என எந்தவசதியுமின்றி அகதிகளாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்களின் சுப காரியங்கள், முக்கிய நிகழ்வுகள், எதிர்கால திட்டங்கள் என ஒவ்வொன்றிருக்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்த மக்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையைக் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

Advertisement

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூரை அடுத்த சாந்தி காலனி, தாய் மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர் மற்றும் காயிதே மில்லத் நகர் என பல்வேறு பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த பல நூறு குடியிருப்புகள் முறையான முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டன.

வீட்டு வரி, மின்சாரக் கட்டணம் என அனைத்து விதமான வரிகளையும், கட்டணங்களையும் செலுத்தி வந்த மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மாற்று ஏற்பாடுகள் எனும் பெயரில் நீண்ட தூரத்திற்கு அப்பால் உள்ள தைலாவரம், பெரும்பாக்கம், கீரப்பாக்கம் பகுதிகளில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. அப்படி ஒதுக்கப்பட்ட வீடுகளோ, பேருந்து வசதி, பள்ளி, கல்லூரி வசதி என எந்தவித வசதிகளும் இல்லாத தனித்தீவாகக் காட்சியளிக்கிறது

Advertisement

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தங்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

ரேசன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு, மருத்துவமனை வசதி என எந்தவித வசதிகளும் இல்லாத இடத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியிருப்பது, ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்வதைப் போல் இருப்பதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாற்று ஏற்பாடுகள் எனும் பெயரில் ஒதுக்கப்பட்ட பத்து மாடி குடியிருப்பின் பல பகுதிகள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.  வீடுகளை இடித்ததற்கான காரணத்தைக் கேட்டால் தங்களைக் கைது செய்வதையும், குரல்வளையை நசுக்குவதையுமே காவல்துறை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு எனக்கூறி சாதாரண மழை பெய்தாலே தாங்காத பெரும்பாக்கத்திற்கு  மாற்றியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியது தான் என்றாலும் காலம் காலமாக அங்கிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளோடு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

Advertisement
Tags :
Advertisement