பாலியல் வன்கொடுமை - அண்ணாமலை கண்டனம்!
ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியை பிடித்து விட்டோம் என்று பெருமை பேசுகிறது திமுக அரசு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சென்னையில், அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படிக்கும் 13 வயது மாணவி, விடுதி காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதுமே, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் வழக்குகள், திமுக அரசால் பொறுப்பின்றி கையாளப்படுவதன் விளைவு, சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் சிறிதும் பயமில்லாமல் போய்விட்டது.
ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியைப் பிடித்து விட்டோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசு, குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் அரசின் முதல் கடமை என்பதை மறந்து போய்விட்டது.
உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவியர் விடுதிகளில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.