For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி!

07:24 PM May 28, 2025 IST | Murugesan M
பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என அறிவித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவருடன் அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், மாணவரை அங்கிருந்து விரட்டி அடித்து விட்டு மாணவியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தனர்.

Advertisement

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் முதல் அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கின் விசாரணை தொடங்கியது. காவல்துறை தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். முன்னதாக இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, தனது அப்பா இறந்துவிட்டார் என்றும், அம்மாவையும், சகோதரியையும், மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை தனக்கு உள்ளதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், குற்றவாளி ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகள் உள்ளனவா? என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கேள்வி எழுப்பினார்.

அப்போது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம்புரிந்த ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி ராஜலட்சுமி,  ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், தண்டனை விவரம் வெளியாகும் வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்திலிருந்து ஞானசேகரன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement
Tags :
Advertisement