பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : இந்தியாவின் புதிய க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை- சிறப்பு தொகுப்பு!
பிரம்மோஸை விட 3 மடங்கு வேகமான, க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்ய இந்தியா தயாராகி உள்ளது. இந்த க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் விரைவில் முப்படைகளிலும் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், ரஷ்யா சீனா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின், ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட திட்டமே ப்ராஜெக்ட் விஷ்ணு ஆகும். இந்தியாவின் தாக்குதல் திறனை அதிவேகமாக மாற்றுவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.
எதிரி இலக்குகள் மீது ஆழமான துல்லியமான தாக்குதல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்தி முடிக்க, அதிநவீன ஆயுதங்களை ப்ராஜெக்ட் விஷ்ணு திட்டத்தின் கீழ் DRDO உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது மணிக்கு 5,400 கிமீக்கு மேல் செல்லும் திறனுடையதாகும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை வைத்துள்ளன.
சுமார் 12 ஹைப்பர்சோனிக் காற்றாலை சுரங்கப்பாதைகளை இந்தியா கொண்டுள்ளது. மேக் 13 வரை வேகத்தை சோதிக்கும் திறன் கொண்டவையாகும்.
2020 ஆம் ஆண்டில், டிஆர்டிஓ ஒரு ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப நிரூபிக்கப்பட்ட வாகனத்தை (HSTDV)
( hypersonic technology demonstrator vehicle ) வெற்றிகரமாக சோதனை செய்தது. சோதனைகளின் போது, ஹைப்பர்சோனிக் காற்று சுவாசிக்கும் ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்த தலைமுறை ஹைப்பர்சோனிக் வெடிமருந்துகளின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, DRDO இந்தியாவில் முதல் முறையாக 120 வினாடிகளுக்கு அதிநவீன ( Active Cooled Scramjet Combustor ) ஆக்டிவ் கூல்டு ஸ்க்ராம்ஜெட் எரிப்பு தரை சோதனையை கடந்த ஜனவரி மாதம் வெற்றிகரமாக நிரூபித்தது.
( Project Vishnu ) 'புராஜெக்ட் விஷ்ணு'வின் கீழ் DRDO தயாரித்த இந்த க்ருஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தற்போதுள்ள பயன்பாட்டில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணையை விட மிகவும் ஆபத்தான ஏவுகணையாகும்.
மணிக்கு 11,000 கிமீ வேகத்தை நொடியில் எட்டும். 1,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று துல்லியமான தாக்குதல்களை நடத்தும். 2,000 கிலோ வரையிலான வழக்கமான வெடிமருந்துகள் மற்றும் அணுஆயுதங்களை சுமந்து செல்லும்.
முதலில் BrahMos ஏவுகணையின் வரம்பு 290 கிமீ ஆக இருந்தது. பின்னர் இது 450 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால், இந்த க்ரூஸ் ஏவுகணையின் வரம்பு 1,500 கிமீ ஆகும். இது பிரம்மோஸை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.
அதிக வேகம், மிக குறைந்த உயரத்தில் பறக்கும் திறனுடைய இந்த ஏவுகணை அதிநவீன சூழ்ச்சித்திறன் உடையதாகும். தற்போது பயன்பாட்டில் உள்ள ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் கண்ணில் படாமல், வானில் மின்னலென பாய்ந்து இலக்கை அழிக்கும் ஆற்றல் உடையதாகும். நிலம், வான் அல்லது கடலில் இருந்து எங்கும் ஏவப்படலாம் என்பது இந்த ஏவுகணையின் சிறப்பம்சமாகும்.
இந்த ஏவுகணையின் வடிவமைப்பில் மையமாக இருப்பது ஒரு சிக்கலான ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் ஆகு. இது காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. இது, ஹைப்பர்சோனிக் வேகத்தை பராமரிக்க உதவுகிறது.
1,000 வினாடிகள் நீடிக்கும் இந்த உந்துவிசை அமைப்பின் தரை சோதனையை DRDO வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது பறக்கும் போது 2,000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டதாகும்.
சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சுழலில், இந்த க்ரூஸ் ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம்,பேரிடர் மீட்பு உள்ளிட்ட பிற மக்கள் பயன்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும் என்றுகூறப்படுகிறது.