பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்... பாதுகாப்புக் கவசமும்...!
இந்தியாவின் பிரம்மாஸ்திரமாக கருதப்படும் ‘பிரமோஸ்’ ஏவுகணையைவிடச் சக்திவாய்ந்த ஒரு ஆயுதத்தை DRDO தயாரித்து வருகிறது. K6 என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணைக்கும் பிரமோசுக்கும் என்ன வித்தியாசம்? விரிவாகப் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
இந்திய ராணுவத்தின் பலம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. ‘அக்னி’, ‘ஆகாஷ்’, ‘பிரமோஸ்’, ‘HYPERSONIC’ என பல்வேறு ஏவுகணைகளையும் விதவிதமான ட்ரோன்களையும் தயாரித்து வல்லரசு நாடுகளுக்கே சவால் விடுகிறது இந்தியா.
அந்த வகையில் நம்நாட்டின் பிரம்மாஸ்திரம் என்றழைக்கப்படும் பிரமோஸைவிட சக்தி வாய்ந்த K6 ஏவுகணையைத் தயாரித்து வருகிறது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்.
SUPERSONIC ஏவுகணையான பிரமோஸ் இந்தியாவின் பெருமையாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பிரமோஸ் மணிக்கு சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது. நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து இதை ஏவமுடியும். 8 புள்ளி 4 மீட்டர் நீளம் கொண்ட பிரமோஸின் எடை சற்றேறக்குறைய 2 ஆயிரத்து 500 கிலோ.
அதிகபட்சமாக 300 கிலோ வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் பிரமோஸ், 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் சக்திகொண்டது.
எதிரிகளின் போர்க்கப்பல்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழிக்க பிரமோஸ் பயன்படுத்தப்படுகிறது. குறைந்த உயரத்தில் பறப்பதால் ரேடார்களின் பார்வையில் இருந்து பிரமோஸ் ESCAPE ஆகிவிடும். போர்க்களத்தில் தமது திறமையை மெய்ப்பித்த பிரமோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பிரமோஸைவிட சக்திவாய்ந்த K6 ஏவுகணையை உருவாக்கும் பணியில் DRDO ஈடுபட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவும் வகையில் உருவாக்கப்படும் K6, BALLISTIC வகையைச் சேர்ந்த ஏவுகணையாகும்.
9 ஆயிரத்து 250 கிலோ மீட்டர் வேகத்தில் எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் திறன்கொண்டது K6.
இரண்டாயிரம் கிலோ வெடிபொருளை எடுத்துச் செல்லும் K6-ஐ பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளைத் தாக்கமுடியும். அணு ஆயுதப் போட்டியில் இந்தியாவின் கை ஓங்குவதற்கு K6 உதவும்.
அடிப்படையில் பிரமோசும் K6-ம் வெவ்வேறு பணிகளுக்காக உருவாக்கப்பட்டவை. உடனடி தாக்குதலுக்கு பிரமோஸ் ஏவுகணை அதிகம் பயன்படும். ஆனால் இந்தியா மீது கைவைத்தால் பெரும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை K6 எதிரிகளுக்குக் கொடுக்கும்.
தற்போது ஆய்வு நிலையில் இருக்கும் K6 பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு வரும். அதன்பின்னர் நவீன ஏவுகணைகளை வைத்திருப்பதாகக் கூறும் சீனா உட்பட பல்வேறு தேசங்கள் இந்தியாவுடன் மோத யோசிக்கும் நிலை உருவாகும்.
மொத்தத்தில் பிரமோஸை இந்தியாவின் போர்வாள் என்றும், K6 ஏவுகணையைப் பாதுகாப்புக் கவசம் என்றும் சொல்லலாம்.