For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய "உலக கோப்பை" வெற்றி!

09:18 AM Nov 05, 2025 IST | Murugesan M
புகழ்  பிராண்டு மதிப்பை உயர்த்திய  உலக கோப்பை  வெற்றி

மகளிர் உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் புகழும், பிராண்ட் மதிப்பும் அதிரடி உயர்வைக் கண்டுள்ளன. அவர்களின் விளம்பரக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பையை முதல் முறையாகக் கைப்பற்றி புதிய வரலாறை எழுதியது. பல ஆண்டுகளாகச் சந்தித்த நெருக்கடிகள், தோல்விகள் மற்றும் தவறவிட்ட வாய்ப்புகளுக்குப் பின் கிடைத்த இந்த வெற்றி, ஒட்டுமொத்த இந்திய அணியினரின் வளர்ச்சியிலும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதேபோல, அடுத்த தலைமுறையினரை விளையாட்டு துறையில் உறுதியுடன் கால்பதிக்க ஊக்குவிக்கும் நிகழ்வாகவும் இந்த வெற்றிப் பார்க்கப்படுகிறது.

Advertisement

உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர்  கிரிக்கெட்டிற்கு புதிய உயிரூட்டியுள்ளது என்பதோடு, அணியினருக்குச் சமூக அங்கீகாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குறிப்பாக, இந்திய மகளிர் அணிக்குக் கிடைத்த இந்த வெற்றியின் மூலம், ஜெமிமா ரோட்ரிகஸ், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கௌர், தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா போன்ற நட்சத்திர வீராங்கனைகளின் பிராண்டு மதிப்பு வானளாவிய உயர்வைக் கண்டுள்ளன.

அதேபோல, வீராங்கனைகளின் விளம்பரக் கட்டணங்களும் சுமார் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் சமூக வலைதளங்களில் இந்த வீராங்கனைகளைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பு அல்லது மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளதும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

பல பிராண்டுகள் இவர்களிடம் விளம்பரங்களுக்காக அணுகி வரும் நிலையில், புதிய விளம்பர ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, பழைய ஒப்பந்தங்களிலும் கட்டண உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் விளாசி, உலகின் கவனத்தை ஈர்த்த ஜெமிமா ரோட்ரிகஸ், பிராண்ட் கட்டணத்தை 75 லட்சம் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே இரவில் 10 முதல் 12 பிரிவுகளைச் சேர்ந்த பிராண்டுகள் தங்களைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, ஜெமிமா ரோட்ரிகஸின் விளம்பரங்களை மேலாண்மைச் செய்யும் JSW SPORTS நிறுவனத்தின் அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்திய அணியில் அதிகச் சம்பளம் பெறும் மகளிர்க் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, தற்போது HINDUSTAN UNILEVER-ன் REXONA DEODRANT, NIKE, HUNDAI, HERBALIFE, SBI, GULF OIL, PNB METLIFE INSURANCE உள்ளிட்ட 16 பிராண்டுகளுக்கான BRAND AMBASSADOR ஆக உள்ளார். இந்த ஒவ்வொரு பிராண்டுகளிடமும் அவர்  சம்பளமாக ஒன்றரைக் கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரைப் பெற்று வருகிறார்.

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வெல்லும் முன்பே, HINDUSTAN UNILEVER நிறுவனம், SURF EXCEL-லுக்கான முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. "அழுக்கு நல்லது" என்ற அந்நிறுவனத்தின் பிரபல வாசகத்தை முன்னிலைப்படுத்தி, இந்த விளம்பரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக HINDUSTAN UNILEVER நிர்வாக இயக்குநர்  பிரியா நாயர்  தெரிவித்துள்ளார். இது மகளிர் கிரிக்கெட் அணியினரின் தைரியத்தையும், அவர்கள் கடந்து வந்த கடினமான பாதையையும் போற்றும் வகையில் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேபோல, PUMA நிறுவனமும் தனது BRAND AMBASSADOR-ஆன ஹர்மன் ப்ரீத் கௌரைப் புகழ்ந்து விளம்பரம் வெளியிட்டிருந்தது. இந்திய மகளிர் அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் SWIGGY INSTAMART, PUMA, PEPSI போன்ற நிறுவனங்களும் வாழ்த்து தெரிவித்து விளம்பரங்களை வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில், என்னதான் இந்த வெற்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்குத் தகுந்த மரியாதையைப் பெற்று தந்திருந்தாலும், இந்த அங்கீகாரம் அவர்களுக்கு நீண்ட காலம் நிலைத்திருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Tags :
Advertisement