For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

புகைக்கு "குட் பை" : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

09:55 AM Nov 04, 2025 IST | Murugesan M
புகைக்கு  குட் பை     மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்

நாட்டின் ஒட்டுமொத்த தலைமுறையையும் புகைப் பிடிக்காமல் தடுத்த முதல் நாடாக மாலத்தீவு உருவெடுத்துள்ளது. இது பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சுமார் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட பவளத் தீவுகளால் ஆன ஒரு தீவுக்கூட்டமாக மாலத்தீவுகள் அமைந்துள்ளது. மாலே என்ற பகுதி இந்த நாட்டின் தலைநகரமாகச் செயல்பட்டு வருகிறது. வெறும் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர்தான் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை. அழகிய நீலக்கடலும், வெண்மணல் கடற்கரையும், ஆடம்பர ரிசார்டுகளுமே இந்த நாட்டின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

Advertisement

இதன் காரணமாக உலகளவில் புகழ்  பெற்று விளங்கும் இந்நாட்டுக்கு, சுற்றுலாத்துறைதான் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்கி வருகிறது.  அரசியல் ரீதியாக ஜனாதிபதி ஆட்சிமுறைப் பின்பற்றப்படும் இந்த நாட்டில், அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் ரீதியான பாதுகாப்பு மற்றும் பொதுசுகாதார நடைமுறைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தலைமுறையையும் புகைப் பிடிக்காமல் தடுத்த முதல் நாடாக மாலத்தீவு உருவெடுத்ததே அதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பின் பிறந்த எந்தவொரு நபரும், நவம்பர் 1-ம் தேதி முதல் புகையிலைப் பொருட்கள் வாங்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற சட்டத்தை அந்நாடு அமல்படுத்தியுள்ளது. அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தெற்காசியாவின் ஒரு பகுதியாக விளங்கும் இந்நாட்டில், ஜனாதிபதி முகமது மொயிஸ்ஸூவின் பொது சுகாதார முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான புதிய தலைமுறையைக் கட்டியெழுப்புவதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விற்பனையாளர்கள் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு முன் வாடிக்கையாளர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், புகையில்லா தலைமுறையை உருவாக்குவதுமே இந்தச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் என்றும் அந்நாட்டுச் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாலத்தீவுகள் மின் சிகரெட்டுகள் மற்றும் வேப்பிங் சாதனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் பயன்பாட்டை அனைத்து வயதினருக்கும் தடைச் செய்திருந்தது. இந்நிலையில், விதிக்கப்பட்ட சட்டத்தை மீறுவோருகு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் புகையிலை பொருட்களை விற்றால் 50 ஆயிரம் மாலத்தீவு ரூபியா வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல, தடைசெய்யப்பட்ட வேப்பிங் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, 5 ஆயிரம் மாலத்தீவு ருபியா அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நியூசிலாந்து இதுபோன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தாலும், அடுத்து வந்த புதிய அரசு அதனை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதேபோல, 2009-க்கு பின் பிறந்தவர்களுக்குப் புகை பிடிக்கத் தடை விதித்து இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சட்ட முன்மொழிவு, அந்நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதத்தில் இருந்து வருகிறது. இதனால், உலகளவில் இத்தகைய சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்திய ஒரே நாடாகத் திகழும் மாலத்தீவுகள், உலகுக்கு முன்னுதாரணமாக ஆரோக்கியமான புகையில்லா தலைமுறைக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

Advertisement
Tags :
Advertisement