புதிய உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா : சிம்பொனி என்றால் என்ன? :
சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிம்பொனி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் நான்கு கவிஞர்கள் நான்கு வித்தியாசமான கவிதைகளைச் சொன்னால் நம்மால் அதை ரசிக்க முடியுமா? முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகள் இணைந்து தரும் இசையை நம்மால் கொண்டாட முடியும்.
சிம்பொனி என்றால் என்ன கேள்விக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த எளிய விளக்கம் இது. சிம்பொனி என்பது WESTERN CLASSIC இசை மரபில் பல்வேறு இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. இது பல பகுதிகளைக் கொண்டது. அவை MOVEMENTS என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் ஒரு சிம்பொனி தொகுப்பு 4 MOVEMENT-களைக் கொண்டிருக்கும். அதில் ஒன்று SONATA என்ற வடிவத்தில் இருக்கும். சிம்பொனி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.
30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் நிகழ்வாக சிம்பொனி இருக்கும். அதில் VIOLIN, CELLO போன்ற தந்திக் கருவிகளும் CLARINET, TRUMPET, SAXOPHONE, புல்லாங்குழல் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகளும் தாள இசைக்கருவிகளும் இடம்பெற்றிருக்கும்.
ஐரோப்பிய இசை வரலாற்றில் WESTERN CLASSIC இசையின் காலகட்டமாக கருதப்படும் 1740 முதல் 1820-ஆம் ஆண்டு வரை சிம்பொனிகள் உருவாகத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. JOSEPH HAYDN, MOZART, BEETHOVEN ஆகியோர் சிறந்த சிம்பொனி இசைத் தொகுப்புகளை உருவாக்கியவர்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை சிம்பொனியை உருவாக்கியிருக்கும் முதல் நபர் இளையராஜாதான். 34 நாட்களில் தாம் உருவாக்கிய சிம்பொனிக்கு VALIANT என்று பெயர் வைத்தார் இசைஞானி. தமது முதல் சிம்பொனி தொகுப்பை லண்டனின் ROYAL PHILHARMONIC ORCHESTRA-வை வைத்து பதிவு செய்துள்ளார். சிம்பொனியை இசைக்க WESTERN MUSIC-ஐ ஒத்திசைந்து வாசிக்கக்கூடிய கலைஞர்கள் தேவை என்பதால் லண்டன் குழுவை நாடினார் இளையராஜா. மேலும் சிம்பொனியை இசைக்க அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கம் வேண்டும்.
இதற்கு முன்பும் மேற்கத்திய இசையில் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் இளையராஜா. 1986-ஆம் ஆண்டு 10 TRACK-களைக் கொண்ட ‘HOW TO NAME IT?’ என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இளையராஜாவின் முதல் FUSION ALBUM-ஆக அது அமைந்தது.
1988-ஆம் ஆண்டு ‘NOTHING BUT WIND’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. WESTERN CLASSIC இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றை இணைத்து அதை உருவாக்கியிருந்தார். 2005-ஆம் ஆண்டு மேற்கத்திய இசையுடன் திருவாசகத்தை வெளியிட்டார் இசைஞானி.
‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற "சுந்தரி கண்ணால் ஒரு சேதி", ‘மூடுபனி’-யில் வரும் "என் இனிய பொன் நிலாவே", ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமல் பாடிய "நினைவோ ஒரு பறவை" ஆகிய பாடல்களில் சிம்பொனி இசையின் வடிவத்தை பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மாபெரும் சாதனைகளை படைத்த பிறகும் தமது தேடலால் புதுப்புது உயரங்களைத் தொட்டு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகிறார் இசைஞானி.