புஷ்பா'னா 'BRAND' : வசூலை குவிக்கும் இரண்டாம் பாகம் - சிறப்பு தொகுப்பு!
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா-2 படத்தால் டோலிவுட்டில் மிக கடுமையான வசூல் மழை பெய்து வருகிறது. மேலும், முதல் நாளில் மட்டும் 294 கோடி வசூலித்ததன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் அந்த படம் புதிய புயலையும் கிளப்பியுள்ளது. அது குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்...
பெரும்பாலான மாசாலா படங்கள், ரசிகர்களை குஷிப்படுத்தி, ஒரு வாரம் லைம்லைட்டில் இருந்து, கணிசமான வசூலை அள்ளிக்கொண்டு கடைசியில் காணாமல்போய்விடும்.
ஆனால், மிகசில படங்கள் மட்டும்தான், முந்தைய படங்கள் படைத்த சாதனைகளை அடித்து நொறுக்குவதற்கென்றே கங்கனம் கட்டிக்கொண்டு வெளியாகும். அத்தகைய படங்களில் ஒன்றுதான், புஷ்பா-2
“படம் 12,000 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுதாம்..” “அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் மட்டும் 30 லட்சமாம்”, “டிக்கெட் புக்கிங்லயே 100 கோடி ரூபா வசூல் பண்ணிடுச்சாம்” என்பது போன்ற புஷ்பா-2 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தன.
ரிலீஸ் ஆவதற்கு முன்பே இத்தனை சாதனைகள் என்றால், ரிலீஸ்-க்கு பிறகு சாதனைகளை படைக்காவிட்டால் எப்படி?. ஆகவே, தற்போது டஜன் கணக்கில் சாதனைகளை படைத்து தென்னிந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கவைத்திருக்கிறது புஷ்பா-2.
இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் 294 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. எந்த இந்திய சினிமாவும் முதல் நாளில் இந்தளவு வசூல்வேட்டை நிகழ்த்தியதாக வரலாறே இல்லை.
இன்னும் முக்கியமாக, இந்தியில் மட்டும் இந்த திரைப்படம் முதல் நாளில் 72 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. பாலிவுட் பட்ஷாவான ஷாருக்கானின் ஜவான் திரைப்படமே முதல் நாளில் 65 கோடி ரூபாய்தான் வசூலித்திருந்தது. ஆனால், புஷ்பா-2 அதனையே ஓவர்டேக் செய்துள்ளது. மேலும், ரன்பீர் கபூரின் அனிமல் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களின் முதல் நாள் வசூலையும் காலி செய்துள்ளது.
வடமாநிலங்கள் என்பவை பாலிவுட் நடிகர்கள் மட்டுமே ராஜ்ஜியம் நடத்தும் கோட்டை என்ற பிம்பம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த பிம்பத்தையும், அந்த கோட்டையையும் தற்போது தகர்த்தெரிந்துள்ளது புஷ்பா-2 படத்தின் அசுரத்தனமான வெற்றி.
ஆனானப்பட்ட பாகுபலி, RRR, கேஜிஎஃப், கல்கி போன்ற மிக பிரமாண்ட படங்கள்கூட இந்தியில் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை பெற்றதில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் சினிமா விமர்சகர்கள், புஷ்பா-2 திரைப்படம் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் போன்ற எல்லைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருவதாகவும், அதற்கு புஷ்பா-2 திரைப்படம் மிகச்சிறந்த உதாரணம் எனவும் கூறுகின்றனர்.
புஷ்பா-2 படத்தின் வசூல் வேட்டையால் படத்தின் தயாரிப்பாளரை விட, அல்லு அர்ஜூனின் ரசிகர்கள்தான் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதே வேகத்தில் சென்றால் இன்னும் எத்தனை நாட்களில் 1,000 கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என்பதை அவர்கள் இப்போதிருந்தே கணக்குப்போட தொடங்கி விட்டனர். முதல் நாளிலேயே இத்தனை வசூல் என்றால், வார இறுதியில் மேலும் வசூல் வேட்டை அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
புஷ்பா படத்தில் ஒரு வசனம் வரும். "புஷ்பா என்றால் பெயர் அல்ல, ப்ராண்ட்". அந்த வசனம் தற்போது நிஜமாகியுள்ளது. இந்திய சினிமாவில் புஷ்பா என்றால் இனி வெறும் பெயர் மட்டுமல்ல. மிகப்பெரிய ப்ராண்ட்.